மகாதிர்: ரிம2.6 பில்லியன் பற்றிய விசாரணையைத் தடுப்பது அப்பணம் சட்டவிரோதமானது என்பதை நிரூபிக்கிறது

 

Mnajibruingthe countryபணத்தை ‘ஹலால்’ வழியில் பெற்றிருந்தால், நஜிப் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறுகிறார்.

ரிம2.6 பில்லியன் சம்பந்தப்பட்ட விசாரணையை தடுப்பதற்கு பிரதமர் நஜிப் ரசாக் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை அந்தப் பணம் சட்டவிரோதமான வகையில் பெறப்பட்டது என்பதை நிரூபிக்கிறது என்றாரவர்.

இஸ்லாத்தில் அனுமதிக்கப்படும் ஹலால் வழியில் அப்பணத்தைப் பெற்றிருந்தால் அது பற்றிய விசாரணை குறித்து நஜிப் அச்சப்பட வேண்டியதில்லை என்று அம்னோ உறுப்பினர்களுக்காக மகாதிர் அவருடைய அகப்பக்கத்தில் பதிவு செய்துள்ள செய்தியில் கூறுகிறார்.

பெர்சே 4 பேரணியில் பிரதமர் நஜிப் குறித்து தெரிவித்த கருத்துக்காக தற்போது மகாதிர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

ஆனால், அது அவரை எந்த வகையிலும் தடுத்து நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவர் நஜிப்பிற்கு எதிரானத் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

ரிங்கிட்டின் வீழ்ச்சி, விலைவாசிகள் உயர்வு, உயர் பணவீக்கம் மற்றும் பங்குகளின் விலையின் வீழ்ச்சி ஆகிய அனைத்தும் நஜிப்பின் நிருவாகத்தில் விளைந்த வேதனைகள் என்று மகாதிர் சுட்டிக் காட்டினார்.

ஜிஎஸ்டி சுமை

“நாம் இப்போது திவாலாகி விட்டோம். ஜிஎஸ்டியினால் சுமை அதிகரித்துள்ளது. அது பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகளை மேலும் ஏற்றிவிட்டுள்ளது”, என்று அவர் மேலும் கூறினார்.

“ரிம42 பில்லியன் கடன் வாங்கி விவேகமற்ற முறையில் முதலீடு செய்யப்பட்டது. பில்லியன்கணக்கான பணம் எங்கே என்று தேடிக்கண்டுபிடிக்க முடியாது.

“தெரிந்ததெல்லாம் நஜிப் அவரது வங்கிக் கணக்கில் ரிம2.6 பில்லியன் வைத்திருந்தார். அந்தப் பணம் இப்போது எங்கே மாற்றப்பட்டுள்ளது என்பது எவருக்கும் தெரியாது.

“ஓர் அரசாங்க அமைப்பு விசாரணையை மேற்கொண்ட போது, நஜிப் அதைக் கலைத்து விட்டார்.

மக்கள் நஜிப்பை பிரதமர் என்ற முறையில் நிராகரித்து, தூற்றுகின்றனர் என்று கூறிக்கொண்ட மகாதிர், ரிம2.6 பில்லியன் மத்தியக்கிழக்கு வட்டாரத்திலிருந்து அரசியல் நன்கொடையாக கொடுக்கப்பட்டது என்ற நஜிப்பின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.