ஜமால்: செப்டம்பர் 16-இல் ஒரே பேரணிதான்

jamal rபெர்சே-க்கு  எதிர்ப்பாக  சிகப்புச்  சட்டைப்  பேரணி  நடத்தப்போவதாகக்  கூறிகொண்டிருந்த  ஜமால்  முகம்மட்  யூனுஸ்,  சிகப்புச்  சட்டையினர்  செப்டம்பர்  16-இல்  தேசிய  சீலாட்  கூட்டமைப்பு (பெசாகா) ஏற்பாடு  செய்துள்ள  பேரணியில்  சேர்ந்து  கொள்ளப்போவதாக  அறிவித்துள்ளார்.

பெசாகா  தலைவர்  முகம்மட்  அலி  ருஸ்தம்,,  சீலாட்  தரப்பினரின்  ‘ஹிம்புனான்  ரக்யாட்  பெர்சத்து (மக்கள்  ஒற்றுமைப்  பேரணி)’  பேரணிக்கும், சிகப்புச்  சட்டையினரின் ‘ஹிம்புனான்  மாருவா  (மலாய்க்காரர்  மானம்  காக்கும் பேரணி) பேரணிக்கும்   சம்பந்தமில்லை  என்று  கூறியதை  அடுத்து  ஜமால்  இவ்வாறு  தெரிவித்தார்.

ஜமால், மலாய்க்காரர்  என்ஜிஓ-களின்  கூட்டமைப்பான  தம்  தரப்பு  பேரணி  எதையும்  ஏற்பாடு  செய்யவில்லை  என்றும்  பெசாக்கா  காட்டும்  வழியில்தான்  தாங்கள்  செல்வதாகவும்  கூறினார்.

“நாங்கள்  பேரணியை  ஏற்பாடு  செய்யவில்லை. நாங்கள்  பெசாகா  பேரணியின்  ஆதரவாளர்கள். அது  பேரணியில்  கலந்துகொள்ள  எங்களை  அழைத்தது”,  என  ஜமால்  கூறினார்.

இதற்குமுன்  ஜமால்,  சீன  வர்த்தகர்கள்  நிரம்பிய  புக்கிட்  பிந்தாங்,  பெட்டாலிங்  ஸ்திரிட்  பகுதிகளில்  பேரணி  நடத்தப்படும்  என்று  அறிவித்திருந்தார்.

ஆனால்.  இன்று  மலேசியாகினியிடம்  பேசிய  அவர்,  பேரணி  பெசாகா  அறிவித்திருப்பதுபோல்  பாடாங்  மெர்போக்கில்  மட்டுமே  நடைபெறும்  என்றார்.

பேரணி  மூடப்பட்ட  இடத்தில்  நடந்தாலொழிய அனுமதி  கொடுக்க  வேண்டாம்  என்று  கூட்டரசுப்  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  கோலாலும்பூர்  மாநகர்  மன்றத்துக்கு  உத்தரவிட்டிருப்பது  பற்றி  வினவியதற்கு, “அதைப்  பற்றிக்  கருத்துரைக்க  விரும்பவில்லை”, என்றார்.

“செப்டம்பர்  16 பேரணி நடக்கும்.  அதைத் தடுக்க  முடியாது”, என  ஜமால்  கூறினார்.