பார்டி அமானா நெகாராவின் தொடக்கவிழாவில் ஒரே மஞ்சள் மயம்

amanahபார்டி  அமானா  நெகராவின்  தொடக்கவிழா  இன்று  ஷா  ஆலம்  ஐடிசிசி  மாநாட்டு  மையத்தில்  நடைபெற்றது.  அவ்விழாவுக்கு வந்த கட்சி  உறுப்பினர்களும்  ஆதரவாளர்களும் மஞ்சள் நிற  ஆடை  அணிந்திருந்ததால்  மாநாட்டு  மையமே  மஞ்சள் மயமாகக்  காட்சியளித்தது.

அவர்கள்  நெகரா  கூ, ஜாலோர்  கெமிலாங்  போன்ற  பாடல்களையும்  கட்சிப்  பாடல்களையும்  பாடித்  தொடக்க  விழாவை  விமர்சையாகக்  கொண்டாடினர்.

அக்கட்சியின்  தலைவர்  முன்னாள்  பாஸ்  துணைத் தலைவர்  முகம்மட்  சாபு,  அக்கட்சி  எல்லா  இனத்தவருக்கும்  உரியது  என்றார். கூடவே  இன்று  கோலாலும்பூரில்  நடக்கும்  பேரணியையும்  இலேசாகக்  கிண்டல்  செய்தார்.

“எல்லா  இனங்களும்  இங்குள்ளன. அங்கு  சிகப்புச்  சட்டைப்  பேரணியில்  ஒரு  இனம்  மட்டுமே  ஆதிக்கம்  செலுத்திக்  கொண்டிருக்கும்”, என்றார்.

காலை  மணி  11.35க்கு  புதிய  கட்சியைத்  தொடக்கி  வைத்த  முகம்மட்  கட்சித்  தலைவர்களையும்  அறிமுகப்படுத்தினார்.

மற்ற  எதிரணிக்  கட்சிகளின்  தலைவர்களும்  அங்கிருந்தனர்.  டிஏபி-யின் லிம்  கிட்  சியாங்,  பிகேஆரின்  ரபிஸி  ரம்லி  போன்றோர்  வந்திருந்தனர். முக்கிய  என்ஜிஓ-களும்  வந்திருந்தன.  பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லாவையும்  காண  முடிந்தது.

பாஸ்  தலைவர்கள்  வரவில்லை.  அது  புரிந்து  கொள்ளக்கூடியதுதான்.   பாஸ்  கட்சியின்  முற்போக்காளர்கள்  அமைத்துள்ள  கட்சிதான்  இந்த   பார்டி  அமானா  நெகாரா.