மசீச முக்கிய விவகாரங்களில் அதன் நிலைப்பாட்டைத் தெளிவுற எடுத்துரைக்க வேண்டும்

ganமசீச,  நாளை,  அதன்  தலைவர்களுக்காக  ஏற்பாடு  செய்துள்ள  சிறப்பு  விளக்கமளிப்புக்  கூட்டத்தில்  பல்வேறு  தேசிய  விவகாரங்களில்  ஒரு  தெளிவான  நிலைப்பாட்டை  எடுப்பதுடன்  சீனச்  சமூகத்தின்  எண்ணங்களையும்  எடுத்துரைக்க  வேண்டும்  என  வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை  வலியுறுத்திய  மசீச முன்னாள்  உதவித்  தலைவர்  கான்  பெங்  சியு,  அக்கட்சி,  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன (1எம்டிபி) விவகாரம்,  பிரதமர்   ரிம2.6பில்லியன்  நன்கொடை பெற்ற விவகாரம்  போன்றவற்றில் கவனம்  செலுத்தத்  தவறி  விட்டது  என்றார்.

நாளைய  சிறப்பு  விளக்கமளிப்புக்  கூட்டம்  பற்றிக்  கருத்துரைத்தபோது  கான்  இவ்வாறு  கூறினார்.

“சீனமொழிக்  கல்வியை  ஒழிக்க  வேண்டும்  என்று கூறப்பட்டிருப்பதற்குக்  கட்சி கண்டனம்  தெரிவிக்க  வேண்டும். பெர்சே 4 பேரணி, சிகப்புச்  சட்டைப்  பேரணி  போன்றவை  நாட்டின் பொருளாதாரத்துக்கு  நல்லதல்ல  என்பதைக் கட்சி  எடுத்துரைக்க  வேண்டும்”, என்றாரவர்.

“இந்த  விளக்கமளிப்புக்  கூட்டம்  நீண்ட  காலத்துக்கு  முன்பே  நடந்திருக்க  வேண்டும். கட்சியையும்  சமூகத்தையும்  எதிர்நோக்கும்  ப்ல  முக்கிய  விவகாரங்கள்  பற்றி  விவாதிப்பது  அவசரமும்  அவசியமுமாகும்”, என்று  கான்  குறிப்பிட்டார்.