ஜாஹிட்: மகனின் திருமண உபசரிப்புக்கு நான் ஒரு காசும் செலவிடவில்லை

zahஇந்தோனேசியாவில்  நடைபெற்ற  தம்  மகனின்  திருமணத்துக்கு ஒரு  காசுகூட  செலவு  செய்யவில்லை  என்கிறார்  துணைப்  பிரதமர் அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி. எல்லாவற்றையும்  மகனின்  மாமனார்  பார்த்துக்  கொண்டாராம்.

ஜாஹிட்டின்  இந்தோனேசியப்  பயணம்  குறித்து  தம்  வலைப்பக்கத்தில்  கேள்வி  எழுப்பியிருந்த அம்னோ  வலைப்பதிவர்  ஷாபுடின்  உசேனுக்கு  அவர்  இவ்வாறு  பதிலளித்தார்.

இந்தோனேசியாவுக்கு  அதிகாரப்பூர்வ  பயணம்  மேற்கொண்டிருந்தபோது  ஆகஸ்ட் 19-இல்  மகனின்  திருமண  விருந்துபசரிப்பிலும் கலந்து  கொண்டதாக  அவர்  கூறினார்.

அதற்கு  முன்பே  அவரின்  மகனுக்கும்  இந்தோனேசியப்  பெண்ணுக்கும்  கோலாலும்பூரில்  திருமணம்  நடந்து  முடிந்திருந்தது.

இந்தோனேசியாவுக்குத்  தாம்  அதிகாரப்பூர்வ  வருகை  மேற்கொள்வதை  அறிந்த  மகனின் மாமனார்  ஜாகார்த்தாவில்  திருமண  விருந்துக்கு  ஏற்பாடு  செய்திருந்தார்.

“என்  செலவில்  நான்  யாரையும்  உபசரிக்கவில்லை. அந்த  நிகழ்வு  என்னுடையதல்ல. எல்லாம் என் சம்பந்தியின்  ஏற்பாடு.

“என்  செலவில்  மலேசியாவிலிருந்து  அமைச்சர்களையோ  விருந்தினர்களையோ  திருமணத்துக்கு  அழைத்துச்  செல்லவில்லை”, என  திருமண  விருந்துபசரிப்பின்போது  அதிகாரத்துவப்  பயணம்  மேற்கொண்டது  குறித்து  கேள்வி  எழுப்பிய  ஷாபுடினுக்கு  ஜாஹிட்  பதிலிறுத்தார்.