தேர்தல் சீர்திருத்த இயக்கமான பெர்சே அதன் பெர்சே 4 பேரணிக்கு திரட்டிய நிதியின் கணக்கு விபரத்தை இன்று வெளியிட்டது. பிரதமர் நஜிப் ரசாக்கும் அவ்வாறு செய்யுமாறு பெர்சே அவருக்கு சவால் விட்டது.
பெர்சேயின் தகவல்படி, ஆகஸ்ட்29-30 கோலாலம்பூர் பேரணிக்கு ரிம2,647,361.74 திரட்டப்பட்டது. அதில் ரிம2,064,652.74 நன்கொடைகளாகப் பெறப்பட்டது.
டி-சட்டை மற்றும் ஸ்கார்ப் ஆகியவற்றின் விற்பனை மூலம் முறையே ரிம553,914 மற்றும் ரிம28,795 திரட்டப்பட்டது.
34 மணி நேரம் நடைபெற்ற பெர்சே பேரணியை ஏற்பாடு செய்வதற்கும், பேரணியின் போதும் ஏற்பட்ட செலவும் உட்பட மொத்த செலவு ரிம664,052.52 ஆகும். இச்செலவு பெர்சே இதுவரையில் திரட்டிய நன்கொடைகளில் 25 விழுக்காடாகும்.
மீதமுள்ள ரிம1,983,309.22 ஐ பெர்சே அதன் எதிர்வரும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வாக்குறுதி அளித்துள்ளது. அதில் வாக்காளர் கல்வி, நீதிமன்ற செலவுகள் மற்றும் பயிற்சிக்கான செலவுகள் ஆகியவை அடங்கும்.
நஜிப் கணக்கு காட்ட வேண்டும்
“(நஜிப்) நாங்கள் எங்களுடைய (கணக்கை) காட்டி விட்டோம். இப்போது உம்முடைய (கணக்கை) காட்டுங்கள்”, என்று பெர்சே குழு உறுப்பினர் தோமஸ் ஃபான் கூறினார். இது நஜிப் ரிம2.6 பில்லியன் அரசியல் நன்கொடையாக மத்தியக் கிழக்கு வட்டாரத்திலிருந்து பெற்றதை தமது சொந்த வங்கிக் கணக்கில் போட்டுக் கொண்டதை குறிப்பிடுகிறது.
முன்னதாக, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா பிரதமர் நஜிப் பெற்றிருந்த அரசியல் “நன்கொடைகள்” பற்றிய விபரத்தை வெளியிடுமாறு பிரதமருக்கு சவால் விடுத்திருந்தார். முதலில் பெர்சே அதன் நிதி விபரங்களை வெளியிடும் என்றும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.
இதற்கு முன்பாக, தமது கணக்கை வெளியிடக்கோரும் பெர்சே ஒரு கபடவேடதாரி ஏனென்றால் அந்த தேர்தல் சீர்திருத்த அமைப்பு அதன் கணக்கை காட்ட விரும்புவதில்லை என்று பெர்சே மீது நஜிப் குற்றம் சாட்டியிருந்தார்.
மத்தியக் கிழக்கிலிருந்து இல்லை
பெர்சே 2,126 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் வெளியிட்டது. அதில் நிதி வழங்கிய அனைவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
“அவர்கள் அனைவரும் மலேசியர்கள், உள்ளூர் அல்லது வெளிநாட்டில் வாழும் மலேசியர்கள். ஒருவர் கூட மத்தியக் கிழக்கிலிருந்து இல்லை”, என்று ஃபான் கிண்டலாகக் கூறினார்.
பெர்சேயின் நிதிக் கணக்கு விரைவில் கணக்காய்வுக்கு அனுப்பப்படும் என்று பெர்சே பொருளாளர் மஸ்ஜாலிஸா ஹம்சா தெரிவித்தார்.
பெர்சே 4 பேரணியைத் தொடர்ந்து குப்பைகளைச் சுத்தம் செய்வதற்கு அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலான் கோரிய ரிம65,000 ஏற்றுக்கொள்ளப்படமாட்டது என்றும் மஸ்ஜாலிஸா தெரிவித்தார்.
நியாயமான வழியில் பணம் வந்ததால் நீங்கள் கணக்கு காட்டியது சரி . ஆனால் ஜிப்பிற்கு வந்தது அப்படி இல்லையே பிறகு எப்படி அவர்கள் கணக்கு காட்ட முடியும்?
அப்படி போடு