வியாழக்கிழமை நடைமுறைக்கு வரவிருக்கும் சாலைக் கட்டண உயர்வு பிஎன் அரசாங்கத்தின் “தனியார்மயக் கொள்கைகள் தோற்றுப்போனதன்” விளைவு என்கிறார் டிஏபி எம்பி டோனி புவா.
பிஎன்னின் தனியார்மயக் கொள்கைகளும் வெளிப்படையான டெண்டர் முறை பின்பற்றப்படாமல் வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கே நெடுஞ்சாலை பராமரிக்கும் பணிகள் வழங்கப்பட்டமையும் தோல்வி கண்டிருக்கின்றன என்றாரவர்.
சாலைக் கட்டண உயர்வு பிஎன் அரசுக்கு நிதி நிர்வாகத்தில் திறமையில்லை என்பதைக் காண்பிப்பதாகவும் புவா கூறினார்.
ஏற்கனவே, ஜிஎஸ்டி, ரிங்கிட் மதிப்புக் குறைவு, பலவீனமடைந்த பொருளாதாரம் போன்றவை மக்களுக்குச் சுமையாக உள்ள வேளையில் இப்போது சாலைக்கட்டண உயர்வும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
“சாலைக் கட்டண உயர்வு, அரசுக்கு வேண்டப்பட்ட நெடுஞ்சாலை பராமரிப்பாளர்கள் அரசின் அனுமதியுடன் சாமான்ய மக்களிடமிருந்து கொள்ளை லாபம் அடிக்க இடமளிக்கின்றது”, என்றார்.
பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மானும் சாலைக்கட்டண உயர்வைச் சாடினார்.
“மக்கள் என்று வரும்போது அரசாங்கம் துணிச்சலாக உதவித் தொகைகளை இரத்துச் செய்கிறது, ஜிஎஸ்டியை அமல்படுத்துகிறது, வாழ்க்கைச் செலவு உயர்ந்துவிட்டது என்ற கூக்குரலுக்கு எதிராக காதைப் பொத்திக் கொள்கிறது.
“இதே துணிச்சலை சாலைப் பராமரிப்பு ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வதில் காண்பிக்காதது ஏன்? சாலைப் பராமரிப்பு நிறுவனங்களின் வருமானம்தான் பன்மடங்கு உயர்ந்துள்ளதே”, என இப்ராகிம் வினவினார்.
Touch’nGo முறையின்கீழ் மக்கள் சாலைப் பராமரிப்பு நிறுவனங்களுக்குச் சாலைக்கட்டணங்களை “முன்கூட்டியே” செலுத்துகின்ற நிலையும் இருக்கிறது என்றவர் வருத்தப்பட்டார்.
பிகேஆர் தொடர்பு இயக்குனர் பாஃமி ஃபாட்சில், பிஎன் அரசாங்கத்துக்கு மக்களின்மீது அக்கறை இல்லை என்பதற்குச் சாலைக் கட்டண உயர்வு ஓர் எடுத்துக்காட்டு என்றார்.
சாலைக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.