சிலாங்கூர் பாஸ் பெர்காசாவுடன் ஒத்துழைக்காது

Slpasnotoperkasaநேற்று பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் பெர்காசாவின் தலைவர் இப்ராகிம் அலியும் கட்டித்தழுவிக் கொண்ட போதிலும் சிலாங்கூர் பாஸ் பெர்காசாவுடன் ஒத்துழைக்காது என்று இன்று அது வலியுறுத்தியது.

“சிலாங்கூர் பாஸ் பெர்காசாவுடனான எந்த ஒத்துழைப்புக்கும் ஒப்புக்கொள்ளாது.

“பாஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் பாரிசானுக்கு எதிரான அதன் போராட்டத்தை மதிக்கும் தரப்புடன் ஒத்துழைக்க சிலாங்கூர் பாஸ் தயாராக இருந்தாலும், இனவாத உணர்வுகளைத் தூண்டும் எந்தத் தரப்பையும் நாங்கள் எதிர்க்கிறோம்”, என்று சிலாங்கூர் பாஸ் ஆணையர் இஸ்கந்தர் சாமாட் இன்று அவரது முகநூலில் கூறினார்.

பாஸ் கட்சியின் உதவித் தலைவருமான இஸ்கந்தர் கட்சியின் தலைமையகத்திற்கு நேற்று பெர்காசா மேற்கொண்ட வருகை குறித்து விளக்கம் கேட்டதாகவும், அதற்கு “அது பெர்காசாவின் ஒரு மரியாதை நிமித்தமான வருகை” என்று பாஸ் தலைமையகம் விளக்கம் அளித்ததாக அவர் கூறினார்.

அவர்கள் 1எம்டிபி சோஸ்மா சட்டம் மற்றும் டிரான்ஸ் பசிபிக் ஒப்பந்தம் போன்றவை குறித்து விவாதித்தனர் என்றும் ஊடகங்களில் கூறப்பட்டிருந்தது போல் எவ்வித ஒத்துழைப்புக்கும் ஏற்பாடுகள் ஏதும் செய்யவில்லை என்று இஸ்கந்தர் தெரிவித்தார்.