அமானா இளைஞர்கள்: 1எம்டிபி மீது அரச விசாரணை தேவை

amanahபார்டி  அமானா  நெகாரா (அமானா)  இளைஞர்கள்  1எம்டிபிமீது  அரச  விசாரணை  ஆணையம்  அமைக்கக்  கோரிக்கை  விடுக்கும்  மகஜர்  ஒன்றை  இன்று  பேரரசரிடம்  சமர்ப்பித்தனர்.

அம்மகஜர்  1எம்டிபி  விசாரணையில்  எவ்வித  குறுக்கீடும்  நிகழாதிருக்க  உடனடியாக  பதவி  விலக  வேண்டும்  எனப் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  ஆலோசனை  கூற  வேண்டும்  என்றும்   ஆட்சியாளர்  மன்றத்தைக்  கேட்டுக்கொள்கிறது.

அமானா  இளைஞர்கள்  அவர்களின்  துணைத்  தலைவர்  முகம்மட்  பைஸ்  பாட்சில்  தலைமையில்  இஸ்தானா  நெகாரா  சென்று  அரண்மனை  அதிகாரி  ஓருவரிடம்  மகஜரைச்  சேர்ப்பித்தனர்.

“மக்களின்  நம்பிக்கையை  நிலைநிறுத்த  ஆர்சிஐ  தேவை  என்று  நினைக்கிறோம். அத்துடன்  பதவி  விலகுமாறு  பிரதமருக்கு  ஆலோசனை  கூற  வேண்டும்  எனவும்  ஆட்சியாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்”, என பைஸ்  கூறினார்.

இதனிடையே,  பிகேஆர்  இளைஞர்  உதவித்  தலைவர்  முகம்மட்  ஷாஸ்னி  ஹம்டான்,  இதேபோன்ற  மகஜர்  எல்லா  சுல்தான்களிடமும்  ஆளுனர்களிடமும்  சமர்ப்பிக்கப்படும்  என்று  தெரிவித்தார்.

“ஆர்சிஐ  உடனடியாக  அமைக்கப்பட  வேண்டும். மக்களால்  இனியும்  காத்திருக்க  முடியாது”, என்றாரவர்.