சுஹாகாம்:ஓராங் அஸ்லிகளுக்கும் கல்வி கற்கும் உரிமை உண்டு. அதை மீறாதீர்

khawமனித  உரிமைகள்  ஆணையம் (சுஹாகாம்),  அரசாங்கம் பூர்வ  குடி(ஓராங் அஸ்லி)களின்  தொடர்பில் தான் முன்வைத்த  பரிந்துரைகளைப் புறக்கணிக்கக்  கூடாது  என்றும்  ஓராங்  அஸ்லி  பிள்ளைகளுக்கு   முறையான  கல்வி  கிடைப்பதை  உறுதிப்படுத்த  இன்னும்  கூடுதலாக திட்டமிட  வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளது.

“ஓராங்  அஸ்லிகள்  சமூக, பொருளாதார  ரீதியில்  ஒதுக்கப்படுவதற்கு அவர்களின்  அடிப்படை  மனித  உரிமைகள்  மீறப்படுவதுதான்  காரணம்  என்று  ஆணையம்  கருதுகிறது”, என  சுஹாகாம்  இடைக்காலத்  தலைவர்  காவ்  லேக்  டீ  கூறினார்.

“ஆணையம்  அது  முன்வைத்த  பல  பரிந்துரைகள்மீது  நடவடிக்கை  எடுக்கப்படவில்லை  என்பதை  எண்ணி  வருந்துகிறது. அதன்  விளைவாக  ஓராங்  அஸ்லி  சமூகம்  ஒதுக்கப்படுதல்  உள்பட  பல  சவால்களைத்  தொடர்ந்து  எதிர்நோக்கி  வருகிறது”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

குறிப்பாக  ஒராங்  அஸ்லி  பிள்ளைகளின் கல்வித்தரம்  வருந்தத்தக்க  நிலையில்  இருப்பதாக  காவ்  தெரிவித்தார்.

ஓராங்  அஸ்லி  பிள்ளைகளில்  பலருக்குக்  கல்வி  கற்கும்  வாய்ப்பு  கிடைப்பதில்லை. பள்ளிகள்  அவர்களின்  குடியிருப்புகளுக்கு  அருகில்  இல்லாததே  இதற்குக்  காரணம்.  இதனால்  அவர்களில்  பலர்  எழுத்தறிவற்றவர்களாக  உள்ளனர்.

பொருளாதார  ரீதியில்  சாதகமற்றவை  என்று  ஓராங்  அஸ்லி  கிராமங்களில்  இருந்த  பள்ளிகளை  மூடிய  கல்வி  அமைச்சின்  முடிவையும்  காவ்  குறைகூறினார்.

அப்பள்ளிகள்  ஓராங்  அஸ்லி  பிள்ளைகள் கல்விக்காக  வெகு  தொலைவுக்குச்  செல்லாமல்  அவர்களின்  குடும்பங்களுக்கு  அருகிலேயே  இருக்க  உதவின.

“எனவே  அமைச்சு  அருகிலேயே  கூடுதல்  பள்ளிகளைக்  கட்டி  ஓராங்  அஸ்லி  பண்பாட்டையும்  நம்பிக்கைகளையும்  புரிந்து  நடந்துகொள்ளக்  கூடிய  ஆசிரியர்களையும்  அங்கு  அனுப்ப  வேண்டும்.

“ஓராங்  அஸ்லிகளின்  பண்பாட்டையும்  நம்பிக்கைகளையும்  ஆசிரியர்கள்  மதித்தால்  மட்டும்  போதாது,  அமைச்சின்  கொள்கைகளிலும்  அது  பிரதிபலிக்க  வேண்டும்”, என்றாரவர்.