சாலைக் கட்டணங்கள் உயர்ந்ததற்கு சாலை பராமரிப்பு நிறுவனங்களுடன் அரசாங்கம் செய்துகொண்ட “மட்டுமீறிய மடத்தனமான ஒப்பந்தங்களே” காரணம் என டிஏபி சாடியுள்ளது.
கட்டண உயர்வுக்குப் பதிலாக இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க அரசாங்கத்துக்குக் கட்டுப்படி ஆகாது என்பதால் சாலைக் கட்டண உயர்வைத் தவிர்க்க இயலவில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் அப்துல் வாஹிட் ஒமார் நேற்று கூறியிருந்ததற்கு பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா இவ்வாறு எதிர்வினை ஆற்றினார்.
“இழப்பீடாகக் கொடுக்க வேண்டிய தொகையை அரசாங்கம் வேறு இனங்களுக்குச் செலவிடுவது சாலைக் கட்டண உயர்வுக்குக் காரணமல்ல. அவர்கள் சாலைப் பராமரிப்பு நிறுவனங்களுடன் செய்து கொண்ட மட்டுமீறிய, மடத்தனமான ஒப்பந்தங்களே காரணம்”, என புவா ஓர் அறிக்கையில் கூறினார்.
நல்ல பாடம் கற்றுக் கொண்டாயிற்று என்ற போதிலும் அரசாங்கம் நெடுஞ்சாலை பராமரிப்புக் குத்தகைகளை வழங்கும்போது பொது வெண்டர்களுக்கு அழைப்பு விடுக்காமல், தொடர்ந்து நேரடியாகத்தான் வழங்கி வருகிறது என்பதை புவா சுட்டிக்காட்டினார்.
“அந்த வகையில் நடப்பு, வருங்கால நெடுஞ்சாலைகள் மலேசிய மோட்டாரோட்டுனர்களின் கழுத்தைப் பிடித்து நெரிக்கும் நிலை தொடரும் என எதிர்பார்க்கலாம். சாலைக் கட்டணங்களும் இன்னும் மோசமாக உயரலாம்”, என்றார்.
யார் அந்த ஒப்பந்தங்களை செய்ததது? மக்களின் பணத்தை கொள்ளை அடிக்க அம்னோ குஞ்சுகள் தானே செய்தது?
டோல் சாலையை புறக்கணியும் நாராயண நாராயண