மாத்தியாஸ் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார், போராட்டத்திற்கு தயாராகிறார்

 

matthias endshungerstrikeஅவரவர் இலட்சியத்திற்காக மடிவதற்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வழக்குரைஞர் மாத்தியாஸ் சாங் விடுத்த சவாலை எந்த ஓர் அம்னோ தலைவரும் ஏற்றுக்கொள்ளாததால், அவர் தனது உண்ணாவிரதத்தை நேற்று முடித்துக் கொண்டார்.

பிரதமர் நஜிப் ரசாக், துணைப் பிரதமர் அஹம்ட் ஸாகிட் ஹமிடி, அம்னோ தலைவர்கள் முகமட் அலி ருஸ்தாம், அஹமட் மாஸ்லான், இஸ்மாயில் சாப்ரி யாக்கோப், அனுவார் மூசா, அப்துல் ரஹ்மான் டாலான் மற்றும் அஸலீனா ஓத்மான் ஆகியோர் அவர் சவால் விடுத்திருந்தவர்களில் அடங்குவர்.

பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர்களில் எவரும் தமது சவாலை ஏற்றுக்கொள்ளாததும், தமது ஏழு நாள் உண்ணாவிரதத்தில் தாம் எவ்விதமான கடும் உடல்நல பாதிப்புக்கும் ஆளாகாமல் பிழைத்துக் கொண்டதும் அல்லா தம்மை பாதுகாத்திருக்கிறார் என்பதற்கு சாட்சியமாகும் என்று அவர் கூறினார்.

நீதி, உண்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான தமது செயல்பாட்டை தாம் வெளிப்படுத்தியுள்ளதாக கூறிய மாத்தியாஸ், நஜிப் அவ்வாறு செய்யத் தவறி விட்டார் என்றார்.

ஆகவே, தமது உண்ணாவிரதத்தை தாம் தொடர வேண்டிய தேவை இல்லை என்றாரவர்.

மாத்தியாஸும் அவரது கட்சிக்காரர் கைருடின் அபு ஹசானும் அக்டோபர் 8 இல் சோஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வெளிநாடுகளில் 1எம்டிபிக்கு எதிராக போலீஸ் புகார்கள் செய்ததன் மூலம் நாட்டின் வங்கி மற்றும் நிதிச் சேவைகளைக் கீழறுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

தற்போது சுங்கை பூலோ சிறையில் சிகிட்சை பெற்று வரும் மாத்தியாஸ் பிரதமர் நஜிப்பை எதிர்த்து போராடுவதற்காக தம்மை பலப்படுத்திக்கொள்ளப் போவதாகவும் கூறினார்.

நஜிப்புக்கு எதிரான தமது போராட்டத்திற்கு அல்லாவும், இந்து பெண் தெய்வமான காளியும், தாவோயிச தெய்வங்களும் தம்மைப் பாதுகாத்து தமக்கு வலிமையூட்டுவார்கள் என்று தாம் நம்புவதாக கத்தோலிக்கரான மாத்தியாஸ் சாங் கூறினார்.