சட்ட வல்லுனர்: ஜோகூர் தனியே பிரிந்து செல்ல முடியாது

azizமாநிலங்கள்,  ஜோகூர்  உள்பட,  மலேசியக்  கூட்டரசிலிருந்து  பிரிந்து  செல்வது  நடவாத  செயல்  என்கிறார் அரசமைப்பு  வல்லுனர்  அப்துல்  அசீஸ்  பாரி.

ஜோகூர்  பட்டத்திளவரசர்  துங்கு  இஸ்மாயில்  சுல்தான்  இப்ராகிம்,  ஒரு  நேர்காணலில்,  அம்மாநிலம்  எந்த  நிபந்தனைகளின்  அடிப்படையில்  கூட்டரசில்  இணைந்ததோ  அந்த  நிபந்தனைகள்  மீறப்படும்  பட்சத்தில்  அதிலிருந்து  பிரிந்து  செல்லலாம்  என்று  கூறியிருப்பதற்கு  அவர்  இவ்வாறு  எதிர்வினை  ஆற்றினார்.

“இளவரசர்  அந்த ஒப்பந்தத்தை  தனிப்பட்டவர்களுக்கிடையிலான  தனிப்பட்ட  ஒப்பந்தமாகக்  கருதிவிடலாகாது”, என்றாரவர்.

கூட்டரசில்  சேர்வதற்கு  உரிமை  இருக்கலாம். ஆனால், அதே  உரிமை  பிரிந்து  செல்வதற்கும்  உண்டு  என்று  சொல்ல  முடியாது  என  அசீஸ்  கூறினார்.

இளவரசர்  விரும்பினால்  இவ்விவகாரத்தை  நீதிமன்றம் கொண்டு  சென்று   நீதிபதிகளின்  கருத்தை  அறியலாம்.

அப்படியானால்  ஒரு  மாநிலம்  கூட்டரசிலிருந்து  பிரிந்து  செல்ல  வழி  இல்லையா?  உண்டு.  நாடாளுமன்றம்  மட்டுமே   அதை  வெளியேற்ற  முடியும்.

அடிக்கடி  பிரிவினைவாதம்  பேசிக்  கொண்டிருந்தால்  இளவசர்  தேச  நிந்தனை  குற்றத்துக்கு  ஆளாகலாம்  என்பதையும்  அசீஸ்  சுட்டிக்காட்டினார்.