பண்டிகார்: துணை அமைச்சர் இருக்கும்போது அமைச்சர் பதில் அளிக்க வேண்டியதில்லை

pandநாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்  கேள்விகளுக்கு துணை  அமைச்சர்களால்  பதில்  அளிக்க  முடியும்  என்கிறபோது  அமைச்சர்கள்  பதில்  அளிக்க  வேண்டியதில்லை  என்று  மக்களைவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  கூறினார்.

அந்தோனி  லோக்( டிஏபி- சிரம்பான்)  நிதி  அமைச்சரான  நஜிப்பைக் குறிவைத்துக்  கேட்ட  கேள்விக்கு   நிதி  துணை  அமைச்சர்  சுவா  டீ  யோங்  பதிலளிக்க  முனைந்தது  பிடிக்காமல்  தகராறு  செய்தபோது  பண்டிகார்  இவ்வாறு  கூறினார்.

“நிதி  அமைச்சர்தான்  அவையில்  இருக்கிறாரே, பிறகு  எதற்காக  துணை  அமைச்சர்  பதில்  சொல்ல  வேண்டும்?.

“நாங்கள்  விரும்புவது  பிரதமருடன்  கேள்வி  நேரம்.  அமைச்சருடன்  கேள்வி  நேரமல்ல்”, என்றாரவர்.   சிறிது  காலத்துக்குமுன்  நாடாளுமன்றச்  சீரமைப்புப்  பற்றிக்  கருத்துரைத்த  பண்டிகார்,  வாரத்துக்கொரு  நாள்  பிரதமர்  நாடாளுமன்றத்தில்  இருந்து  கேள்விகளுக்குப்  பதில்  அளித்தால்  நன்றாக  இருக்கும்  என்று  கூறியதைக்  கருத்தில்கொண்டே  லோக்  அவ்வாறு  தெரிவித்தார்.

என்றாலும்,  லோக்  சொன்னது  பண்டிகாருக்குப்  பிடிக்கவில்லை.

“அமைச்சர்  இருந்தால்  துணை  அமைச்சர்  பதில்  அளிக்கக்  கூடாது  என்று  நிலை ஆணை  எதுவும்  கிடையாது. முன்பு  நாடாளுமன்றச்  செயலாளர்கள்கூட  பதில்  சொல்வார்கள்”, என்றாரவர்.

லோக்  அதை  ஏற்காமல்  எதிர்வாதம்  செய்யத்  தொடங்கினார். அதனால் அவையில்  அமளி  மூண்டது.

அதனால்  பொறுமையிழந்த  பண்டிகார்  அனைவரையும்  அடங்குமாறு  அதட்டினார். லோக்கையும்  அமருமாறு  பணித்தார்.

லோக் தொடர்ந்து தொல்லை  கொடுத்துக்  கொண்டிருந்தால்    அவையிலிருந்து  நீக்கப்படுவார்  என்று  எச்சரித்த  அவைத்  தலைவர்  அவ்ர்  மேற்கொண்டு  கேள்வி  கேட்கவும்  தடை  விதித்தார்.