அன்னிய தொழிலாளர்கள் அவர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தைக் குறைக்கும் திட்டம்

fundஅரசாங்கம்  மலேசியாவில் உள்ள  வெளிநாட்டுத்  தொழிலாளர்கள்  அவர்கள்  நாட்டுக்கு  அனுப்பும்  பணத்தைக்  குறைத்து  அதன்வழி  ரிங்கிட்  பெருமளவில்  நாட்டை  விட்டு  வெளியேறுவதைத்  தடுக்க  ஒரு  திட்டம்  கொண்டு  வருவது  பற்றி  ஆலோசித்து  வருவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்வழி  அன்னிய  தொழிலாளர்கள்  அவர்களின்  சம்பளத்தின்  ஒரு  பகுதியை  அரசாங்கம்  அமைக்கும்  ஒரு  நிதிக்குச்  செலுத்த  வேண்டியிருக்கும்  என  சின்சியு  டெய்லி  தகவலறிந்த  ஒரு  வட்டாரத்தை  மேற்கோள்காட்டி  கூறிற்று.

அல்லது  அவர்களின்  சம்பளத்தில்  ஒரு  பகுதி  பிடித்தம்  செய்யப்பட்டு  ஊழியர்  சேமநிதி(இபிஎப்)போல்  செயல்படும்  இந்நிதிக்கு  அனுப்பப்படும்.

“அன்னிய  தொழிலாளர்களின்  சம்பளத்தில்  பெரும்பகுதி  அவர்களின்  சொந்த  நாட்டுக்கு  அனுப்பப்படுவதையும்  அதன்வழி ரிங்கிட்  பெருமளவில்  வெளியேறி  மலேசியப்  பொருளாதாரம்  பாதிக்கப்படுவதையும்  அரசாங்கம்  அறிந்தே  உள்ளது.  அதன்  காரணமாகத்தான்  இப்படியொரு  திட்டம்  உருவாக்கப்பட்டுள்ளது”, என்று  அந்த  வட்டாரம்  தெரிவித்தது.

தேசிய  பொருளாதார  மன்றமும்  அமைச்சரவையும்  கொள்கை  அளவில்  இத்திட்டத்துக்கு  ஆசி  வழங்கி  விட்டதாக  அந்தச்  சீனமொழி  நாளேடு  கூறிற்று.  திட்டம்  பற்றிய  மற்ற  விவரங்களையும்  அதை  எப்படிச்  செயல்படுத்துவது  என்பதையும்  உள்துறை  அமைச்சு  ஆராய்ந்து  வருகிறது.

இதன்  தொடர்பில்  அவ்வேடு  உள்துறை  துணை  அமைச்சர்  நூர்  ஜஸ்லான்  முகம்மட்டை  வினவியதற்கு    திட்டம்   இன்னும்  ஆராயப்பட்டு  வருவதால்  அது  பற்றித்  தகவல்  அளிப்பதற்கில்லை  என்று  கூறிவிட்டாராம்.