மகாதிர்: ஆட்சியாளர்கள் வெறும் ரப்பர் முத்திரைகள் அல்ல

monarchமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  ஆட்சியாளர்கள்  வெறும்  இரப்பர்  முத்திரைகள்  அல்ல  என்றும்  அவர்களுக்கு  நிர்வாகப்  பொறுப்புகளும்  உண்டு  என்றும்  கூறினார்.

ஆட்சியாளர்கள்   அதிகாரப்  பகிர்வுக்  கோட்பாட்டுக்குக்  கட்டுப்பட்டவர்கள்  என்று  துணைப்  பிரதமர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிட்  நினைவுறுத்தியிருப்பதற்கு  எதிர்வினையாக  மகாதிர்  இவ்வாறு  கூறினார்.

“ஆகோங்கும்  மற்ற  மலாய்  ஆட்சியாளர்களும்  அரசமைப்புவழி  மன்னர்கள்  என்பது  உண்மையே.

“அதற்காக,  அரசாங்கத்தின் செயல்களை  எல்லாம் சரிதான்  என்று கூறும்  இரப்பர்  முத்திரைகள் அல்ல  அவர்கள்”. மகாதிர்  அவரது  வலைப்பதிவில்  இவ்வாறு  பதிவிட்டிருந்தார்.

ஆட்சியாளர்கள் சில  நேரங்களில்  சொந்த  விருப்புரிமையின்படி  நடந்து  கொண்டு வேறு  யாரிடமும்  அல்லது  எந்தவோர்  அமைப்பிடமும்  ஆலோசனை  கேட்கலாம். அது  அமைச்சரவையாக  இருக்க  வேண்டும்  என்ற  அவசியமில்லை.

“மகஜர்கள் கொடுக்கப்பட்டால்  அல்லது  பொதுமக்கள்  சேர்ந்து  கோரிக்கை  எழுப்பினால்  ஆட்சியாளர்கள்  அமைச்சரவை  சொல்வதை  மட்டும்தான்  கேட்க  வேண்டும்  என்ற  அவசியமில்லை.

“மாமன்னர்  அமைச்சரவைக்கு  அப்பால்  மற்றவர்களிடம்  ஆலோசனை  நாடலாம்.

“அமைச்சரவை   பொதுமக்களின்  கோரிக்கைகளுக்குச்  செவி  சாய்க்காதபோது  பேரரசரும்  ஆட்சியாளர்களும்  அக்கோரிக்கைகளுக்கு  எதிர்வினையாற்றுமாறு  அரசாங்கத்திடம்  வலியுறுத்தலாம்”, என்றார்.

அந்த  வகையில், பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  உருவாக்கிய  1எம்டிபி  பற்றி  ஆட்சியாளர்கள்  கருத்துரைத்தது  அரசமைப்பு விதிகளை  மீறுவதாகாது.

அரசமைப்பில்  ஆட்சியாளர்களுக்கு  நிர்வாகத்தில்  பொறுப்புண்டு  என்பதை  எடுத்துக்கூறும்  பல  இடங்களை  மகாதிர்  கவனப்படுத்தினார்.

இப்படியெல்லாம்  ஆட்சியாளர்களின்  அதிகாரத்தைத்  தற்காத்துப்  பேசும்  மகாதிர்   பிரதமராக  இருந்தபோது  அவரும்  ஆட்சியாளர்களின்  அதிகாரத்தை  ஒடுக்குவதில்  தீவிரம்  காட்டினார்  என்பது  குறிப்பிடத்தக்கது.