ஜாஹிட்: பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்கப் போகிறார்களா? யார் அவர்கள்?

voteபட்ஜெட்  தாக்கல்  செய்யப்படும்போது  அதற்கெதிராக வாக்களிப்பார்கள்  என்று  கூறப்படும்  ஐந்து  பிஎன்  எம்பிகளுக்கு  எதிராக  என்ன  நடவடிக்கை  எடுக்கப்படும்  என்று  துணைப்  பிரதமர்  அஹமட்  ஜாஜிட்  ஹமிடியிடம்  ஒரு  செய்தியாளர்  வினவினார்.

அதற்கு  அஹ்மட்  ஜாஹிட், “யார்  அவர்கள்?”, என  எதிர்க்  கேள்வி  போட்டார்.

முன்னாள்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்,  முன்னாள் அமைச்சர்  ஷாபி  அப்டால்  முதலானோர்தான்  அவர்கள்  என்று  ஜாஹிட்டிடம்  விளக்கப்பட்டது.

“இதை  அவர்களிடம்  கேட்பதுதான்  நல்லது.  அவர்களுக்கு  எதிராக  என்ன  நடவடிக்கை  எடுக்கலாம்  என்று  அவர்களிடமே  கேளுங்கள்”, என்று  கூறி  விட்டார். இன்று  புத்ரா  உலக  வாணிக  மையத்தில்   செய்தியாளர்  கூட்டத்தில்  ஜாஹிட்  கலந்து  கொண்டார்.

பட்ஜெட்டுக்கு  எதிரான  வாக்களிப்பைத்  தடுக்க  திட்டம்  உண்டா  என்ற  கேள்விக்கும்  அவர்  விடையளிக்க  மறுத்தார்.

“என்னுடைய  வியூகத்தைத்  தெரிவிக்க  இயலாது. சொல்லி  விட்டால்  அதன்  பின்னர்  அது  ஒரு  வியூகமாக  இராது”, என்றார்.

நடப்பு  நாடாளுமன்றக்  கூட்டத்தில்  பிரதமர்  நஜிப்புக்கு  எதிராக  நம்பிக்கையில்லா  தீர்மானம்  கொண்டுவர  வாய்ப்பில்லை  என்பதால்  எதிரணி  எம்பிகளும்  ‘பிஎன் கிளர்ச்சி  எம்பிகளும்’  சேர்ந்து  பட்ஜெட்டுக்கு  எதிராக  வாக்களித்து  நஜிப்பின்  பெயரைக்  ‘கெடுக்க  வேண்டும்’  என்று  வலியுறுத்தப்பட்டுள்ளது.