கல்வி அமைச்சிடம் புகைமூட்டத்துக்கு எதிராக உருப்படியான திட்டம் இல்லை

ramasamyகல்வி  அமைச்சர்  மகாட்சிர்  காலிட்,  “எதிர்பாராத  நிகழ்வுகளைச்  சமாளிக்கும்”  திட்டங்களைக்  கொண்டிருப்பதாகக்  கூறினாலும் அமைச்சு  அவ்வப்போதைய  நிலவரங்களுக்கு  ஏற்ப  செயல்படுதைத்தான்  வழக்கமாகக்  கொண்டிருக்கிறது  என்று  பினாங்கு  அரசு  குறைகூறியது.

“ஏ பிளான், பி  பிளான்,  சி  பிளான்  என்று  எஸ்பிஎம்  வரை  அமலாக்குவதற்குத்  திட்டங்களைக்  கொண்டிருப்பதாக  அமைச்சர்  கூறுகிறார். சரி, அந்தத்  திட்டங்கள்தான்  என்ன?”, என்று  பினாங்கு  துணை  முதலமைச்சர்  II  பி.இராமசாமி வினவினார்.

புகைமூட்ட நிலவரம்  குறித்து  அமைச்சரவை  மிகவும்  கவலை  கொண்டிருப்பதாக  மகாட்சிர்  கூறியதாக  த  ஸ்டார்  செய்தி  வெளியிட்டிருந்தது.

“நிலவரம்  மோசமடைந்து  நெருக்கடி  நிலையை  நோக்கி  நகர்ந்து  கொண்டிருக்கும்  வேளையில்  இது  போன்று  பேசிக்  கொண்டிருப்பதில்  பயனில்லை”, என  இராமசாமி  கூறினார்.

“புகைமூட்டம்  மேலும்  மோசமடைந்தால்   அமைச்சு  பள்ளிகளைக்  காலவரையின்றி  மூடி விடுமா?”, என்றவர்  வினவினார்.

பினாங்கு  ஆட்சிக்குழுவில்  கல்வி  விவகாரங்களுக்குப்  பொறுப்பாக  இருந்தாலும்  மகாட்சிரின்  எதிர்பாராத  நிகழ்வுகளைச்  சமாளிக்கும்  திட்டங்கள்  பற்றித்  தமக்கு  இதுவரை  விளக்கப்பட்டதில்லை  என்றவர்  தெரிவித்தார்.

“அமைச்சு  மாநில  ஆட்சிக்குழுவிடமும்  ஆலோசனை  கேட்க  வேண்டிய  தருணம்  வந்து  விட்டது. எல்லாரும்  சேர்ந்து  இதற்குத்  தீர்வு  காணலாம்”, என்று  அவர்  சொன்னார்.