நஜிப் வழக்கு தொடுப்பதை ஏன் தாமதப்படுத்துகிறார்? லிங்குக்குப் புரியவில்லை

lingதம்மை  ஒரு  பொறுமைசாலி  என்று  கூறிகொள்கிறார்  மசீச  முன்னாள்  தலைவர்  டாக்டர்  லிங்  லியோங்  சிக். ஆனால்,  அவருக்கே  பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்  அவருக்கு  எதிராக  வழக்கு  தொடுப்பதைத்  தாமதப்படுத்துவது  வியப்பளிக்கிறது.

“காத்திருக்கிறேன். நான்  பொறுமைசாலி.

“ஆனால்,  அவர் (வழக்கு தொடுக்க)  இத்தனை  நாள்  எடுத்துக்  கொண்டிருப்பது  எனக்கே  ஆச்சரியமாக  உள்ளது”, என  லிங்  கூறியதாக  த  ஸ்டார்  ஆன்லைன்  அறிவித்துள்ளது.

பிரதமர்  பொதுப்  பணத்தை  எடுத்துக்கொண்டார்  என்று லிங்  குற்றஞ்சாட்டியதை  அடுத்து  குற்றச்சாட்டைத்  திரும்பப்  பெறச்  சொல்லி  அந்த  முன்னாள்  போக்குவரத்து  அமைச்சருக்கு  நஜிப்  கோரிக்கைக் கடிதம்  ஒன்றை  அனுப்பியிருந்தார்.

லிங்  சொன்னதை  மீட்டுக்கொள்ளவோ  மன்னிப்பு கேட்கவோ  மறுத்தார்.  பிரதமரை  நீதிமன்றத்தில்  சந்திக்க  தயார்  என்றும்  கூறினார்.

நஜிப்பின்  கோரிக்கைக்  கடிதம்  லிங்குக்குக்  கொடுத்த  ஏழு-நாள்  அவகாசம்  அக்டோபர்  12-உடன்  முடிவுக்கு  வந்தது.

2016 பட்ஜெட்டைத்  தாக்கல்  செய்த  பின்னர்  நஜிப்  வழக்கு  தொடுப்பது  பற்றி  முடிவெடுப்பார்  என  அவரின்  வழக்குரைஞர்  முகம்மட்  ஹவாரிஸாம்  ஹருன்  கூறினார். கடந்த  வெள்ளிக்கிழமை  பட்ஜெட்டும்  தாக்கல்  செய்யப்பட்டது.

நேற்று  ஹவாரிஸாம்  இன்னும்  இரண்டொரு  நாளில்  நஜிப்  முடிவு  செய்வார்  என்றார்.