‘நஜிப் பதிலளிக்க வேண்டியதில்லை’ என்பதா: அஸலினாமீது கிட் சியாங் பாய்ச்சல்

azபிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக் விரும்பினால்  கேள்விகளுக்குப்  பதிலளிக்காமல்  இருக்கலாம்  என்று  கூறியதன்வழி  பிரதமர்துறை  அமைச்சர்  அஸலினா  ஒத்மான்  நாடாளுமன்ற  நடைமுறைகளைத்  தலைகீழாக  மாற்றப்  பார்க்கிறார்  எனக்  குற்றம்  சாட்டப்பட்டுள்ளது.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  கேள்விகளுக்கு எப்போது  பதிலளிக்கலாம்  என்பதைத்  தீர்மானிக்கும்  அதிகாரம்  இருப்பதாகவும்  அதன்படி  அவர்  1எம்டிபி, ரிம2.6 பில்லியன்  நன்கொடை  ஆகியவை  பற்றி  விரும்பும்போது  பதிலளிக்கலாம்  என்றும்  அஸலினா  நாடாளுமன்றத்தின்  முதல்  நாள்  கூட்டத்தில்  கூறியிருந்தார்.

“விரும்பும்போது  1எம்டிபி  பற்றிப்  பதிலளிக்கும்  உரிமை  பிரதமருக்கு  உண்டு  என்று (அஸலினா)  கூறி  நாடாளுமன்றத்தை  மிகவும்  அவமதித்து  விட்டார்”, என  டிஏபி  மூத்த  தலைவர்  லிம்  கிட்  சியாங்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

அப்படிக்  கூறியதன்வழி  ஒரு  மோசமான  முன்மாதிரியை  ஏற்படுத்தி  விட்டார்  என்று  குறிப்பிட்ட  லிம்,  இனி  பிஎன்  நாடாளுமன்ற  உறுப்பினர்களும்  அவர்களை  நோக்கிக்  கேள்விகள்  தொடுக்கப்படும்போது  இதே  பதிலைச்  சொல்லத்  தொடங்குவார்கள்  என்றாரவர்.