1எம்டிபி தலைவர் அருள் கந்தா தொலக்காட்சி விவாதத்தில் கலந்துகொள்ள விதித்திருந்த நிபந்தனை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அவருடன் மோத பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவாவும் தயாராகி விட்டார்.
இதற்குமுன் அருள் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டுமானால் புவா 1எம்டிபிமீது விசாரணை நடத்திவரும் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிலிருந்து விலக வேண்டும் என்று நிபந்தனை போட்டதால் தொலைக்காட்சி விவாதம் நடப்பது சந்தேகமாக இருந்தது.
இப்போது இருவருமே இணக்கம் கண்டிருக்கிறார்கள். ஆனால், அது விவாத நிகழ்ச்சி அல்ல என்றும் அது ஓர் உரையாடல் நிகழ்ச்சிதான் என்றும் புவா கூறினார்.
“அது கேள்வி-பதில் நிகழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். விவாத நிகழ்ச்சியாக இருக்க முடியாது. ஏனென்றால் கேள்விகளை நான்தான் கேட்கப் போகிறேன்.
“அவர் என்னிடம் கேட்பதற்கு எதுவுமில்லை”, என புவா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஆக, உரையாட இருவரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். இவர்களின் உரையாடலுக்கு இடமளிக்க தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் ஆயத்தமாக உள்ளாரா? இடமளிக்கப்படும் என அமைச்சர் ஏற்கனவே வாக்களித்துள்ளார். அப்படியே இடமளித்தாலும் உரையாடல் நேரடியாக ஒளிபரப்படுமா அல்லது ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஒளியேற்றப்படுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்.