எம்பி: பெர்சே தலைவர்மீது நடவடிக்கை; சிகப்புச் சட்டைகள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

nieஅடுத்த செவ்வாய்க்கிழமை  பெர்சே  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா  அமைதிப்  பேரணிச்  சட்டத்தின்கீழ்  குற்றம்  சாட்டப்படவுள்ள  வேளையில்  சிகப்புச்  சட்டைகள்  மட்டும்  சுதந்திரமாக  திரிகிறார்களே  என  கூலாய்  எம்பி  தியோ  நை  சிங்  குறைப்பட்டுக்  கொண்டிருக்கிறார்.

“சிகப்புச்  சட்டைகளின்  பேரணிக்கு  எதிராக  26 போலீஸ்  புகார்கள்  செய்யப்பட்டுள்ளன.

“தேர்ந்தெடுத்த  முறையில் சட்ட  நடவடிக்கை  மேற்கொள்ளப்படுவதில்லை  என்பதைக்  காண்பிக்க,  போலீஸ் விசாரணைகள்  என்னவாயின  என்பதையும்  சிகப்புச்  சட்டைகளில்  எவரேனும்  குற்றம்  சாட்டப்படுவார்களா  என்பதையும்  துணைப்பிரதமரும்  உள்துறை  அமைச்சருமான  அஹம்ட்  ஜாஹிட்  ஹமிடி  தெரிவிக்க  வேண்டும்”, என அவர்  ஓர்  அறிக்கையில்  கேட்டுக்கொண்டார்.

ஆகஸ்ட்  30, 31 பேரணி  பற்றி  முன்கூட்டியே  தெரியப்படுத்தாதற்காக  மரியா  சின்  அமைதிப்  பேரணிச்  சட்டத்தின்கீழ்  குற்றம்  சாட்டப்படுவார்  என்பதை  அறிந்து தியோ  அதிர்ச்சி  அடைந்தார்.

“மலேசிய  வரலாற்றில்  மிகவும்  வெற்றிகரமான  பேரணி  என்றால்  அது  பெர்சே 4-தான். மிக  நீண்ட  தெரு  ஆர்ப்பாட்டம். 500,000 பேர்  அதில்  கலந்துகொண்டார்கள்”,  என்றாரவர்.

வரலாறு  காணாத  அளவுக்குப்  பெருந்திரளானோர்  கலந்துகொண்ட  போதிலும்  அது  அமைதியாக  நடந்து  முடிந்தது.

தியோ  நாடாளுமன்றத்தில்  அளிக்கப்பட்ட  ஒரு  பதிலைச்  சுட்டிக்காட்டி, 34-மணிநேரப்  பெர்சே  பேரணியைக்  கட்டுப்படுத்த 191  அதிகாரிகளும்  2,419  போலீஸ்வீரர்களும்  தேவைப்பட்டதாகவும்  அதற்கான  செலவு  ரிம2,737,400 என்றும்  சொன்னார்.

மாறாக, பாதிநாள்  மட்டுமே  நடைபெற்ற  செப்டம்பர்  16  சிகப்புச்  சட்டைப்  பேரணியைக்  கட்டுப்படுத்த  263  அதிகாரிகளும்  3,648  போலீஸ்வீர்ர்களும்  பணியில்  ஈடுபடுத்தப்பட்டனர்.  அதற்கான  செலவு  ரிம4,500,927.50.

“இதிலிருந்து  சட்ட  நடவடிக்கை  எடுப்பதாக  இருந்தால்  அது  சிகப்புச்  சட்டைப்  பேரணி  ஏற்பாட்டாளர்கள்மீதுதான்  எடுக்கப்பட  வேண்டுமே  தவிர  பெர்சே 4மீது  அல்ல  என்பது  வெள்ளிடைமலை”, என  தியோ  கூறினார்.