நூர் ஜஸ்லான்: மற்றவர்களோடு ஓப்பிடும்போது அன்வாருக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது

specialநாட்டில்  உள்ள  மற்ற  50,000  சிறைக் கைதிகளுக்குக்  கிடைக்காத  சிறப்புச்  சலுகையை   அரசாங்கம்,  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு மனிதாபிமான  அடிப்படையில் வழங்கி  வருவதாக  உள்துறை  துணை  அமைச்சர்  நூர்  ஜஸ்லான்  கூறினார்.

அன்வாரின்  மகள்  நுருல்  இஸ்ஸா  அன்வார்  கேள்விகளால்  அவரை வறுத்தெடுத்தபோது  நூர்  ஜஸ்லான்  அவ்வாறு  கூறினார்.

“நாடு  முழுக்க  50,000  சிறைக்  கைதிகள்  உள்ளனர். அவர்கள்  அனவரும்  சமமாக  நடத்தப்பட  வேண்டும்.

“ஆனால்,  அன்வாரைப்  பொறுத்தவரை  அவர், உடற்பயிற்சி சிகிச்சை,  வெள்ளிக்கிழமை  தொழுகை போன்றவற்றில்  பங்கேற்க  வாய்ப்பு  வழங்கப்படுகிறது.

“அரசாங்கம்  அவருக்குத்  தனிச்  சலுகை  அளிப்பதுடன்  மனிதாபிமானத்துடனும்  நடந்து  கொள்கிறது  என்பதை  வலியுறுத்த  விரும்புகிறேன். இந்த உண்மையை  ஒப்புக்கொள்ளுங்கள்”, என அன்வார்  உடற்பயிற்சி  சிகிச்சைகளுக்கு  அனுப்பப்படுவதில்லை  என்று  குறைகூறிய  நூருலிடம்  அவர்  தெரிவித்தார்.

அன்வார்  சிறைக்குச்  சென்று   38 வாரங்கள்  ஆகின்றன. இக்காலக்கட்டத்தில் அவருக்கு  83 முறை  மருத்துவ  சோதனைகள்  செய்யப்பட்டுள்ளன. 10  தடவை  உடற்பயிற்சி  சிகிச்சைக்குச்  சென்று  வந்துள்ளார்  என  நூர்  ஜஸ்லான்  கூறினார்.

இவை  தவிர  அன்வார்  15 தடவை  அவரின்  குடும்பத்தையும்  65  தடவை  அவரின்  வழக்குரைஞர்களையும்  சந்திக்க  அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.