மகாதிர்: நாசவேலை செய்ததற்காக குற்றம் சாட்டப்பட வேண்டியவர் நஜிப்தான்

 

Tochargenajibமலேசிய வங்கி மற்றும் நிதி அமைவுமுறைகளுக்கு எதிராக நாசவேலையை மேற்கொண்டதற்காக குற்றம் சாட்டப்பட வேண்டியவர் நஜிப்தான் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் கூறுகிறார்.

அரசாங்கத்திடமிருந்து ஒரு சதுர அடி ரிம60.00 க்கு வாங்கிய நிலத்தின் விலைக்கு மேலாக 5,000 விழுக்காடு கூட்டி விற்று கடனை திருப்பிக் கட்டலாம்.

ஆனால், 1எம்டிபி உருவாக்கப்படாமல் இருந்திருந்தால், கடன் வாங்கப்பட்ட இவ்வளவு பெருந்தொகை காணாமல் போய் இருக்காது என்பதுதான் உண்மையான நிலவரமாகும் என்று மகாதிர் அவரது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“இதற்காக, வாங்கியக் கடன்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டாலும், வங்கி மற்றும் நிதி அமைவுமுறைகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக 1எம்டிபி மற்றும் அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் மீது கண்டிப்பாக குற்றம் சாட்டப்பட வேண்டும்.

“1எம்டிபி மற்றும் அதன் நிருவாகிகள் ஆகியோர்தான் இந்த நாட்டை நாசப்படுத்தியவர்கள். அதற்கு முன்பு இந்நாடு நல்லதோர் வங்கி மற்றும் நிதி அமைவுமுறைகளைக் கொண்டிருந்தது.

“இவர்கள்தான் மலேசிய வங்கி மற்றும் நிதி அமைவுமுறைகளுக்கு எதிராக நாசவேலையை மேற்கொண்டதற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள்.

“நஜிப்தான் 1எம்டிபியை உருவாக்கி, ரிம42 பில்லியனை கடன் வாங்கி முதலீடு செய்து அதனை இழந்து விட்டதால், நஜிப் மீதும்கூட நாசவேலை செய்ததாக குற்றம் சாட்டப்பட வேண்டும்”, என்று மகாதிர் அவரது வலைப்பதிவில் கூறியுள்ளார்.

நாட்டின் நிதி அமைவுமுறைகளுக்கு எதிராக நாசவேலைகளை மேற்கொண்டார்கள் என்று பத்து கவான் அம்னோ உதவித் தலைவர் கைருடின் அபு ஹசான் மற்றும் மகாதிரின் முன்னாள் அரசியல் செயலாளர் மாத்தியாஸ் சாங் ஆகியோருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி கருத்துரைக்கையில் மகாதிர் இவ்வாறு கூறினார்.