யார் அந்த அம்னோ எழுவர்? தெங்கு அட்னான் மெளனம்

ku nanஅம்னோவில்  ஒழுங்கு  நடவடிக்கையை  எதிர்நோக்கும்  எழுவர்  பற்றி  வினவியதற்கு  அம்னோ  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்   தெங்கு  மன்சூர் பதில்  அளிக்காமல்  மெளனம்  சாதித்தார்.

இன்று  நாடாளுமன்ற  வளாகத்தில்  அவரிடம்  அக்கேள்வியை  முன்வைத்தபோது  பதிலளிக்காமல்  நடந்து  கொண்டே  இருந்தார்.

ஆண்டு  இறுதிக்குள்  அம்னோ  துணைத்  தலைவர்  முகைதின்  யாசின்  இடைநீக்கம்  செய்யப்படுவாரா  என்று  வினாவுக்கும்  அவரிடமிருந்து  பதில்  இல்லை.

“நான்  பதில்  சொல்ல  விரும்பவில்லை”, என்றவர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

கடந்த  வாரம் தெங்கு  அட்னான்,  அம்னோவில்  எழுவர்மீது  ஒழுங்கு  நடவடிக்கை  எடுக்கப்படும்  சாத்தியம்  இருப்பதாகக்  குற்ப்பிட்டார். அவ்வெழுவரின்  வெளிப்படையான  பேச்சால்  அம்னோ  “வெறுப்படைந்திருப்பதாக”  அவர்  கூறினார்.

முகைதின்  அம்னோ  உறுப்பினர்கள்  தமக்கு  ஆதரவு  அளிக்க  முன்வராத கோழைகள்  என்று  கடிந்து  கொண்டதை  அடுத்து  தெங்கு  அட்னான்  அவ்வாறு  கூறியிருந்தார்.

கடந்த  ஜூலையில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  1எம்டிபி  பற்றிக்  குறைகூறியதற்காக  முகைதினைத்  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  தூக்கினார்.

அதேபோல்  அம்னோ  உதவித்  தலைவர்  முகம்மட்  ஷாபி  அப்டாலும் அமைச்சர்  பொறுப்பிலிருந்து  அகற்றப்பட்டார்.

ஆக  ஒழுங்கு  நடவடிக்கைக்கு ஆளாகும்  எழுவரில்  இவ்விருவரும்  இடம்பெற்றிருப்பதாகக்  கூறப்படுகிறது.

மலேசியன்  இன்சைடர்,  கருப்புச்  சட்டைப்  பேரணியை  ஏற்பாடு  செய்த  ஜமால்  முகம்மட்  யூனுஸ்மீதும் நடவடிக்கை  எடுக்கப்படும்  எனக்  கூறியுள்ளது.

தகவலறிந்து  வட்டாரமொன்றை  மேற்கோள்காட்டி  அதைத்  தெரிவித்த  அச்செய்தித்தளம், முகைதின், ஷாபி போக  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  முன்னாள்  அமைச்சர்  சைனுடின்  மைடின்,  கெடாவின்  முன்னாள்  மந்திரி  புசார்  சனுசி  ஜூனிட்,  செராஸ் தொகுதித் தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷி  ஆகியோரும்  நடவடிக்கை  எடுக்கப்படுவோரின்  பட்டியலில்  இடம்பெற்றிருப்பதாக்  கூறியது.

ஆனால், அவர்கள்மீது  எப்படிக்  குற்றம்  சாட்டுவது  என்பதுதான் தெங்கு  அட்னானுக்குப்  புரியவில்லை.

“என்ன  குற்றம்  சாட்டுவது  என்று  தெரியாமல்  சட்ட  ஆலோசகரும்  இவ்விவகாரத்திலிருந்து  விலகிக்  கொண்டிருக்கிறார்”  என்று  அவ்வட்டாரம்  தெரிவித்ததாம்.