நாளேடு போலீசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுகிறது; ஐஜிபி குற்றச்சாட்டு

igpபோலீஸ்  படையைச்  சேர்ந்த  ஒருவர் வழிப்பறிக் கொள்ளைக்கு  ஆளானபோது  போலீசார்  விரைந்து  செயல்பட்ட  சம்பவம்  பற்றி  சின்  சியு  டெய்லி   வெளியிட்டிருந்த  செய்தியில்  குற்றம்  கண்டுபிடித்திருக்கிறார்  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலிஸ் (ஐஜிபி) காலிட்  அபு  பக்கார்.

அந்த  நாளேடு  அச்செய்தியை  முகநூலில்  பகிர்ந்து  கொண்டிருந்தது. அதற்கு  அது  இட்ட  தலைப்பு:  ‘இன்னொரு  வழிப்பறி,  ஆனால் இதற்கு  விரைவில்  தீர்வு  காணப்பட்டது’.

இந்தத்  தலைப்பு  போலீசார்  தங்களில்  ஒருவர்  பாதிக்கப்படும்போது  மட்டும்தான்  விரைந்து  செயல்படுவார்கள்  என்று  கூறுவதைப்  போன்று  உள்ளது   என  காலிட்  நினைத்து  விட்டார். அதனால், மக்களை  போலீசுக்கு  எதிராக  தூண்டிவிட  வேண்டாம்  என்றவர்  அந்நாளேட்டை  எச்சரித்தார்.

“வழிப்பறிக்  கொள்ளை  போன்ற குற்றச்  செயல்களுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுப்பதில்  போலீஸ்  பாகுபாடு  காட்டுவதில்லை.  இந்த  நாளேடு  அதன்  வாசகர்களைத் தூண்டிவிடக்  கூடாது”, என்றவர்  டிவிட்டரில்  கூறியிருந்தார்.

இதற்கு  சின் சியு  டெய்லி  முகநூல்  பக்கத்திலேயே  பதிலளித்திருந்தது.

“முகநூல்  செய்தி  போலீசார்  பாகுபாட்டுடன்  நடந்துகொள்கிறார்களா  என்று  கேள்வி  கேட்கவில்லை.

“போலீசார்  ஆக்கப்பூர்வமாகவும்  திறமையாகவும்  செயல்பட்டிருப்பதைத்தான்  அது  குறிப்பிடுகிறது.

“அண்மைக்காலமாக  போலீசார்  பல  முக்கியமான  வழக்குகளுக்கு  விரைந்து  தீர்வு  கண்டிருப்பது  இதை  நிரூபிக்கிறது”, என்று  அது  கூறிற்று.

மேலும், அச்செய்தி  போலீஸ்  பற்றித்  தப்பான  எண்ணத்தைத்  தோற்றுவித்திருந்தால் அதற்காக  மன்னிப்பு  கேட்டுக்கொள்வதாகவும்  அது  கூறியிருந்தது.