தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிக்கு அமோக வரவேற்பு!

IQ Test2சிலாங்கூர் மாநில அரசின் ஆதரவோடு நடத்தப்பட்ட அறிவுத்திறன் போட்டியில் இருநூறு தமிழ்ப் பள்ளியில் படிக்கும் மற்றும் பயின்ற மாணவர்கள் பங்குபெற்றனர். இவர்களோடு சில பெற்றோர்களும் கலந்து கொண்டனர். கடந்த சனிக்கிழமை காலை சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் நடந்த இப்போட்டியை ஸ்ரீஅண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினர்  டாக்டர் சேவியர் ஜெயகுமார் துவக்கி வைத்தார்.

மலேசியாவில் தமிழ்க் கல்வி தொடங்கப்பட்டு அடுத்த வருடத்தோடு 200 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அதன் எல்லையை எட்டும் தறுவாயில் தமிழ்க் கல்வியோடு தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு மேலும் வலுசேர்க்க இந்த அறிவுத்திறன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது என்றார் இந்த நிகழ்வின் செயலாளரும்  சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரியத்தின் தலைவருமான கா. உதயசூரியன்.

IQ Test GROUPஇதை சிலாங்கூர் மாநில அரசுடன் கூட்டாக இணைந்து சிலாங்கூர் தமிழ்ச் சங்கமும், சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரியமும், தமிழ்க்கல்வி கலை கலாச்சார சங்கமும் நடத்தினர்.

தாய்மொழிப் பள்ளியில் கல்வி கற்பவர்களின் அறிவுத்திறன் ஒரே மொழிப்பள்ளியில் கல்வி கற்பவர்களை விட அதிகமாக இருக்கும் என்கிறது ஆய்வுகள். இதில் உள்ள உண்மையை வெளிக்கொணர இந்த  அறிவுத்திறன் போட்டியை நடத்தியதாக  ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

IQ Test1சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த போட்டியில் இரண்டு ஆய்வுக்கான தேர்வுகள் நடந்தன. முதலாவதாக நுண்ணறிவு எண் அல்லது அறிவார்ந்த ஈவு (Intelligent Quotient) எந்த அளவில் உள்ளது என்பதற்கான தேர்வாகும். இது மொழி சார்பில்லாத வகையில் எல்லா கேள்விகளும் வடிவமைப்புகளை மட்டுமே கொண்ட கேள்விகளாகும். இரண்டாவது தேர்வு அடிப்படை தமிழ் மொழி சார்ந்த வகையில் உள்ள கேள்விகளாகும். இந்த தேர்வு வழி கலந்து கொண்ட மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் படித்த மாணவர்கள் என்பது உறுதி செய்யப்படும்.

IQ4சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இராமச்சந்திரன் மற்றும் அவரது பள்ளி மேம்பாட்டு குழுவினரும், சிலாங்கூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மணிவண்ணன், துணைத்தலைவர் இலா. சேகரன்,  முன்னாள் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் க. முருகன், வள்ளிகண்ணன் ஆகியோருடன் ஆதரவாளர்கள் பலர் இந்த போட்டிகள் இனிதே நடந்தேர உதவி புரிந்தனர்.

IQ Test3அறிவுத்திறன் போட்டிக்கான ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட கா. ஆறுமுகம் கண்காணிப்பாளராகவும் இருந்தார். போட்டியின் முடிவுகள் டிசம்பர் முதலாம் தேதிக்கு பின்பு அவர்களின் நுண்ணறிவு எண் அல்லது அறிவார்ந்த ஈவின் அளவு தனிப்பட்ட வகையில் அறிவிக்கப்படும். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் அதோடு சிறப்பாக தேர்வு பெற்றவர்களுக்கு பரிசுகளும் டிசம்பர் 4-ஆம் தேதி மிட்லண்ஸ் மாநாட்டு  மையத்தில் வழங்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.