பெர்சே 4 இல் பங்கேற்றதற்காக சிலாங்கூர் மந்திரி புசாரின் மகன் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளான்

 

 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெர்சே 4 பேரணியில் கலந்துகொண்டது சம்பந்தமாக வாக்குமூலம் அளிக்க சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியின் இளவயது மகன் போலீசாரால் அழைக்கப்பட்டிருக்கிறான்.

மந்திரி புசாரும் பிகேஆரின் துணைத் தலைவருமான அஸ்மின் அலி அவரது குடும்பத்தாருடன் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே பேரணியில் கலந்து கொண்டார்.

பள்ளி இறுதிச் சோதனை எழுத வேண்டியிருக்கும் தமது மகன் நாளை காலை மணி 10.00க்கு டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்திற்கு வருமாறு அழைக்கப்படட்டிருக்கிறான் என்று அஸ்மின் தெரிவித்தார்.

“ஒரு 15 வயது சிறுவனுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இக்கொடுமை அவனை அம்னோவின் தவறான செயல்களுக்கு எதிராகச் செயல்படத்தான் தூண்டும்.

“எனது மகன் பாஷீர் ஒரு தைரியமான பையன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’, என்று அஸ்மின் டிவிட்டர் செய்துள்ளார்.

ஆகஸ்ட் 29 – 30 இல் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே 4 பேரணி 150,000 க்கு மேற்பட்ட மக்களை ஈர்த்திருந்தது. அப்பேரணியில் அஸ்மின் அவரது குழந்தையை ஒரு பேரணிக்கு அழைத்து வந்திருந்ததற்காக அமைதியாக ஒன்றுகூடுதல் சட்டத்தின் கீழ் அவரும் விசாரிக்கப்படுகிறார்.