பெர்காசா: விரும்புகிறீர்களோ இல்லையோ, இந்தியர்களும் சீனர்களும் “வந்தேறிகள்”தான்

 

 விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, இந்த நாட்டு சீனர்களும் இந்தியர்களும் அன்றைய மலாயா கூட்டமைப்பின் வந்தேறிகள்தான் என்று மலாய்க்காரர்களின் உரிமைப் போராட்ட அமைப்பான பெர்காசா கூறுகிறது.

நவம்பர் 6 இல், மலேசிய இந்திய காங்கிரஸ் 67 ஆவது பேரவையில் உரையாற்றிய அதன் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் “வந்தேறிகள்” என்ற சொல் பயன்படுத்தப்படுவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று விடுத்திருந்த கோரிக்கைக்கு எதிர்வினையாற்றிய பெர்காசாவின் தகவல் பிரிவுத் தலைவர் ஹசான் பாஸ்ரி முகமட் இவ்வாறு கூறினார்.

(இவ்வாறான கோரிக்கை) சுப்ரமணியம் எவ்வளவு அறிவாழமற்றவராக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது என்று கூறிய ஹசான், வந்தேறிகளின் வரலாற்றை மாற்றத்தான் அவர் முயற்சிக்கிறார் என்றார்.

வரலாறு என்றும் வரலாறாகத்தான் இருக்கும் என்று ஹசான் நினைவுறுத்தினார்.

“இதனால்தான் நாம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நமக்கு போதிக்கப்படுகிறது.”

வந்தேறிகள் என்ற சொல் இந்தியர்களையும் சீனர்களையும் மிகவும் நோகச் செய்வதால் அச்சொல் பயன்படுத்தப்படுவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இப்பிரச்சனை தலை தூக்கியதற்கு காரணம் சீன மற்றும் இந்தியச் சமூகங்களில் தங்களுடைய இனம் மற்றும் சமயம் ஆகியவற்றுக்காக போராட முயற்சிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று ஹசான் நம்புகிறார்.

அதனால்தான் அவர்கள் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டவைகள் குறித்து கேள்விகள் எழுப்புகின்றனர். அவர்களின் பண்பின்மை மலாய்க்காரர்களின் உணர்வைத் தெளிவாகப் புண்படுத்துகிறது என்று கூறிய ஹசான், மலாய்க்காரர்கள் அவர்களின் உரிமைகள் பற்றி கேள்வி எழுப்பியதே இல்லை என்றார்.

இந்தியர்கள் தைப்பூசம் கொண்டாடும் போது பத்துமலைக்கு செல்லும் சாலைகள் மூடப்படுகின்றன. அது பற்றி மலாய்க்காரர்கள் கேள்வி எழுப்பியதே இல்லை என்றாரவர்.

அவ்வாறே, சீனர்கள் சாப் கோ மெய் கொண்டாடும் போது பெரிய ஊதுவத்திகளைக் கொளுத்துகின்றனர். அதன் புகையால் காற்றின் தூய்மை பாதிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

மலாய்க்காரர்களின் உணர்வுகளை நோகச் செய்யும் பல்வேறு விவகாரங்கள் இருக்கின்றன. ஆனால், மலாய்க்காரர்கள் பொறுமை மிக்கவர்கள் என்பதில் பெயர் போனவர்கள் என்று அவர் கூறிக்கொண்டார்.

அனைத்து இனங்களும் சமயங்களும் அவரவர்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டு மற்றவர்களின் உரிமைகள் குறித்து கேள்விகள் கேட்காமல் இருந்தால் வந்தேறிகள் பிரச்சனை எழுந்திருக்காது என்றும் அவர் கூறினார்.

வந்தேறிகள் என்ற சொல்லில் எந்தத் தவறும் இல்லை என்றாரவர்.

இந்த விவகாரத்தை தாய்மொழிப்பள்ளிகளில் வலியுறுத்த தாங்கள் ஆலோசனை கூறுவதாக தெரிவித்த ஹசான், அப்போதுதான் குழந்தைகள் இஸ்லாத்தையும் மலாய்க்காரர்களையும் தொடார்ந்து இழிவுபடுத்தி வரும் அல்வின் டான் போல் வெறுப்புணர்வுடன் வளரமாட்டார்கள் என்றார்.