மனித உரிமைகள் ஆணையத்திற்கான நிதி ஒதுக்கீடு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது

2016 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மனித உரிமைகள் ஆணையத்திற்கான (சுஹாகாம்) நிதி ஒதுக்கீடு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது மலேசிய அரசாங்கம் மனித உரிமைகள் மற்றும் சமுதாய சட்டத்துக்குட்பட்ட தன்னுரிமைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என்று சுஹாகாம் செயல்முறை இயக்குனர் சீவன் துரைசாமி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

கடந்த ஆண்டில் சுஹாகாம் பெற்ற நிதி ஒதுக்கீடு ரிம10 மில்லியனுக்கும் சற்று கூடுதலாகும். 2016 ஆண்டுக்கான பட்ஜெட்டில் அது ரிம5.5 மில்லியனுக்கு குறைக்கப்பட்டுள்ளது.

இது கிட்டத்தட்ட 50 விழுக்காடு நிதி குறைப்பாகும். இதனைக் கொண்டு சுஹாகாம் அதன் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பொதுப்பரப்புரைகளை மேற்கொள்வது சிரமமாகும் என்றாரவர்.

அரசாங்கம் இந்த குறைக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்க்கீட்டை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கம் அதனைச் செய்யாவிட்டால், சுஹாகாம் ஃபாரிஸ் கோட்பாடுகளுக்கு ஏற்ப செயல்படத் தவறிய நிலை ஏற்படும் என்று சுட்டிக் காட்டிய துரைசாமி, இது இறுதியில் சுஹாகாமின் தற்போதைய ஃபாரிஸ் கோட்பாடுகள் அடிப்படையிலான “A” தகுதி நிலையிலிருந்து படியிறக்கத்திற்கு இட்டுச் செல்லும் என்றார்.

ஃபாரிஸ் கோட்பாடுகள் ஐக்கிய நாட்டு மன்றத்தால் தேசிய மனித உரிமைகள் கழகங்கள் பின்பற்றுவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைக் கூறுகளாகும்.

இவ்வாறு படியிறக்கம் செய்யப்படுவது மலேசிய அரசாங்கம் தொடர்ந்து பின்பற்றி வரும் மனித உரிமைகள் மீறல்களுக்கு வலுசேர்க்கும் என்பதோடு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக கோட்பாடுகளை நிலைநிறுத்துவதில் மலேசியாவின் ஈடுபாட்டிற்கு அவப்பெயர் ஏற்படும் என்று துரைசாமி வருத்தம் தெரிவித்தார்.