கேவியஸ்: 1எம்டிபியின் படுதோல்விக்கு நஜிப் பலிகடாவாக்கப்பட்டுள்ளார்

அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1எம்டிபியின் படுதோல்விக்கு அந்நிறுவனத்தின் நிருவாகம் முழுப்பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும். மாறாக, அதன் தோல்விக்கு பிரதமர் நஜிப் பலிகடாவாக்கப்பட்டுள்ளார் என்று பிபிபி கட்சியின் தலைவர் எம். கேவியஸ் இன்று கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கூறினார்.

1எம்டிபி ஒரு நிறுவனம். என்னிடம் ரிம52 பில்லியன் சொத்தும் ரிம42 பில்லியன் கடனும் இருந்தால் பிரச்சனை ஏதும் இல்லை. சொத்தை விற்று கடனை அடைத்து விடலாம்.

எனது நிருவனம் நன்றாக இயங்கவில்லை என்றால், அந்த நிருவாகம் குறித்து நீங்கள் எது வேண்டுமானாலும் கூறலாம். ஏன் நஜிப் பலிகடாவாக்கப்பட வேண்டும் என்று கேவியஸ் கேட்டார்.

நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் போடப்பட்டதாக கூறப்படும் ரிம2.6 பில்லியன் “நன்கொடை” பற்றி கேட்டதற்கு, “எல்லாருக்கும் நன்கொடை கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, 40,000 பேருக்கு திறந்த இல்ல நிகழ்ச்சி நடத்துவதற்கு எனக்கு நன்கொடை கிடைக்கிறது. நல்லவர்கள் நன்கொடை கொடுக்கிறார்கள். ஆகவே, அதில் தவறு ஏதும் இல்லை”, என்று கேவியஸ் வலியுறுத்தினார்.

“நான் அந்தப் பணத்தை திருடவில்லை. நான் மற்றவர்களின் பணத்தை எடுத்துக்கொள்ளவில்லை. நான் வரி கட்டுவதை தவிர்க்கவில்லை. ஆகவே, அதில் (நன்கொடை பெறுவதில்) தவறு ஏதும் இல்லை”, என்று அவர் வலியுறுத்தினார்.

“அது ஊழல் அல்ல. அதில் ஊழல் கூறுகள் ஏதும் இல்லை”, என்று அவர் மேலும் கூறினார்.

நஜிப்பும் அவரது துணைவியார் ரோஸ்மாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால், அவர்கள் செய்தியாளர்களிடமிருந்து கேள்விகளை எடுத்துக்கொள்ளவில்லை.