அம்னோவை அல்ல, பிரதமரை மாற்றுவதே குறிக்கோள்: அம்பிகாவுக்கு மகாதிரின் பதில்

priorமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,   தம்முடைய  குறிக்கோள் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  மாற்றுவதுதான்  என்றும்  அம்னோவை  மாற்றுவதல்ல  என்றும்  கூறியுள்ளார்.

“நஜிப்பைப்  பதவி  இறக்குவதற்குத்தான்   முன்னுரிமை”, என்றவர்  செய்தியாளர்களிடம்  கூறினார்.

தேசிய  மனித உரிமைக்  கழகத்தின்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்,  அக்கழகம்,  மகாதிர்  அரசாங்கத்தை  மாற்றி  அமைத்து  அம்னோவை  ஒழித்துக்கட்ட  விரும்பினால் அவருடன்  ஒத்துழைப்பது  பற்றி ஆராயலாம்  என்று  கூறியிருந்ததற்கு  எதிர்வினையாக  மகாதிர்  இவ்வாறு  கூறினார்.

மகாதிர்  அம்னோவைத்  தற்காத்துப்  பேசினார்.

“அம்னோ  ஊழல்  கட்சி  அல்ல. அம்னோவில்  உள்ளவர்கள்தாம்  ஊழல்வாதிகள்”, என்று  குறிப்பிட்டவர்  அம்னோவில்  உள்ளவர்கள்  கட்சியிடமிருந்து  எதையாவது  எதிர்பார்க்கிறார்கள்  என்றார்.

“என்னைப்  பொருத்தவரை, தலைமை  மாறினாலொழிய,  மாற்றத்தை  எதிர்பார்க்காதீர்கள்”, என  மகாதிர்  கூறினார்.