ஏஜி நியமிக்கப்பட்டதற்கான உண்மை காரணங்கள் தெரிய வேண்டும்: ஜைட் கோரிக்கை

zaidஅப்துல்  கனி  பட்டேலுக்குப்  பதிலாக  சட்டத்துறை  தலைவராக(ஏஜி)  நியமிக்கப்பட்ட  முகம்மட்  அபாண்டி  அலி  அதற்கான  காரணத்தைத்  தெளிவாக  எடுத்தியம்ப  வேண்டும்  என  முன்னாள்  சட்ட  அமைச்சர்  ஜைட்  இப்ராகிம்  வலியுறுத்தியுள்ளார்.

அபாண்டியின்  ஏஜி  நியமனம் ஒரு  திடீர்  முடிவு. அதற்கான  உண்மையான  காரணங்கள்  தெரியவில்லை.

“அதைத்தான்  நாடே  தெரிந்துகொள்ள  ஆவலாக  உள்ளது. எதற்காக  அவர்  தேர்ந்தெடுக்கப்பட்டார்?”, என்று  மலேசியாகினியிடம்  பேசியபோது  ஜைட்  வினவினார்.

1எம்டிபிமீது  கனி  தலைமையில்  சிறப்புப்  பணிக்குழு  ஒன்று  விசாரணை நடத்திக்கொண்டிருந்த  வேளையில்  அவர்  அப்பதவிக்கு  நியமிக்கப்பட்டார்.

பொறுப்பேற்று  ஓரு  வாரம்கூட  ஆகியிருக்காது,  அபாண்டி பணிக்குழுவைக்  கலைத்தார்.  விசாரணை  அதிகாரிகள்  தனித்தனியே  விசாரணை  நடத்துமாறு  உத்தரவிட்டார்.

“இவ்வளவு  நடந்திருக்க  அபாண்டி  உண்மையான  காரணங்களைத்  தெரிவித்திருந்தால்  அவரது  நேர்காணல்  பொருளுள்ளதாக  இருந்திருக்கும்”, என   முன்னதாக  ஜைட்  அவரது  டிவிட்டர்  பக்கத்தில்  கூறினார்.

அபாண்டி  மலேசியன்  இன்சைடருக்கு  வழங்கிய  நேர்காணல்  பற்றித்தான்  அவ்வாறு  குறிப்பிட்டார்.

“கனியை  வெளியேற்றியதற்கான  காரணத்தை  பிரதமர்  அவரிடம்  தெரிவித்தாரா?  அவரிடம்  என்ன  எதிர்பார்க்கப்பட்டது? பணிக்குழுவுக்குத்  தடை  விதிப்பா? உண்மையைச்  சொல்லுங்கள்”, என்றவர்  டிவிட்டரில்  கூறினார்.

கனிக்கு “உடல்நலன்  சரியில்லை”  என்று  காரணம்  கூறப்பட்டு அவர்  பதவியிலிருந்து  அகற்றப்பட்டார்.  ஆனால்,  நவம்பர்  3-இல்  பொது நிகழ்வு  ஒன்றில்  முகம்  காட்டிய  அவர்  பணியில்  இருந்தபோது  சிறுநீரகச்  சுத்திகரிப்புச்  சிகிச்சை  செய்து  கொண்டிருந்தாலும்  “திடமாகவே  இருந்ததாக”க்  கூறினார்.