கிட் சியாங்: பிடிஎன் இலாகாவை மூடுங்கள்

Kitinvitesமலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அடுத்த ஆண்டிற்கான அரசாங்க நிதி ஒதுக்கீட்டை பாதியாகக் குறைப்பதை விட “வருந்தும் தன்மையற்ற, எதிர்மறையான இயல்புள்ள, பிளவுப்படுத்துகிற” தேசிய குடியியல் பயிற்சி இலாகாவை (பிடிஎன்) மூடிவிடுவது நல்லது என்று டிஎபி நாடாளுமன்ற மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.

கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான கிட் சியாங், சுஹாகாம் ஆணையத்தின் 2016 ஆம் ஆண்டிற்காக பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை இந்த ஆண்டின் ஒதுக்கீடான ரிம10 மில்லியனிலிருந்து ரிம5.5 மில்லியனுக்கு குறைத்திருப்பது மலேசியர்களின் ஜனநாயாக மற்றும் மனித உரிமைகள் மீதான வேட்கைக்கு பிரதமர் நஜிப்பிடம் அனுதாபம் இல்லை என்பதைக் காட்டுகிறது என்றார்.

பிடிஎன்னுக்கு 2016 ஆண்டு பட்ஜெட்டில் ரிம50 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை லிம் சுட்டிக் காட்டினார்.

முன்னாள் உயர்மட்ட மலேசிய அரசுப் பணியாளர்களின் அமைப்பான ஜி25 பிடிஎன்னை ஒரு “தீவிர மலாய்-இனவாத” அமைப்பு என்று கண்டித்திருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

“பிடிஎன்னின் வருத்தப்படும் தன்மையற்ற, பிடிவாதமான, தேசிய எதிர்ப்பு மனப்பாங்கை அதன் இயக்குனர் ராஜா அரிப் ராஜா அலி பல தலைமுறைகாளாக இந்நாட்டில் வாழ்ந்து வரும் சிறுபான்மை மக்களை வந்தேறிகள் என்று கூறியிருப்பதின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்”, என்று லிம் சுட்டிக் காட்டினார்.

பிரதமர் நஜிப் இந்நாட்டு சீனர்களும், இந்தியர்களும் “மலேசியாவின் மைந்தர்கள்” என்று அவர்களுக்கு உறுதியளிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையில், பிடிஎன்னின் இயக்குனர் ராஜா அரிப் அவர்களை வந்தேறிகள் ஏளனப்படுத்தும் வகையில் கூறியிருப்பது மட்டு மீறிய மற்றும் மன்னிக்க முயாததாகும் என்று கிட் சியாங் சாடினார்.

சீனர்களையும் இந்தியர்களையும் இழிவுபடுத்தும் வந்தேறிகள் என்ற சொல்லை பிடிஎன் இயக்குனர் ராஜா அரிப் பயன்படுத்தியதற்காக அவரை அமைச்சரவை கண்டிக்குமா என்று அவர் வினவினார் [பிடிஎன் பிரதமர் துறையின் கீழ் இயங்கும் ஓர் அமைப்பாகும்.]