கல்விக்கான ஒதுக்கீடு குறைந்தது- இளைஞர்கள் மீது பிஎன்னுக்கு நம்பிக்கை போய்விட்டதா? பிகேஆர் கேள்வி

education2016  பட்ஜெட்டில்  உள்ளூர்  பல்கலைக்கழகங்களுக்கான  நிதி  ஒதுக்கீட்டில்  1.4 பில்லியன்  வெட்டு  விழுந்திருப்பது  பிஎன்னுக்கு  இளைஞர்களின் ஆதரவு  மேலும்  குறைவதற்கு  வழிகோலும்  என  பிகேஆர்  வியூக  இயக்குனர்  சிம்  ட்ஸே  ஸின்  இன்று  எச்சரித்தார்.

“13வது  பொதுத்  தேர்தலில்  21-க்கும்  25 வயதுக்குமிடைப்பட்ட  இளைஞர்களின்  ஆதரவு  46  விழுக்காடுதான்  பிஎன்/அம்னோவுக்குக்  கிடைத்தது.

“தொடர்ந்து  ஈராண்டுகளாகக்  கல்விக்கான  ஒதுக்கீட்டைக்  குறைப்பது  அந்த  வயதினரிடையே  ஐயப்பாட்டை வளர்க்கும்”. என  பாயான்  பாரு  எம்பி-யுமான  சிம்  கூறினார்.

இந்நடவடிக்கை,  அரசாங்கம்  இளைஞர்களின்,  குறிப்பாக  பட்டப்படிப்பு  பயில்வோரின்  ஆதரவைப்  பெறும்  நம்பிக்கையைக்  கைவிட்டிருப்பதுபோன்ற  தோற்றத்தை  உண்டு  பண்ணலாம்.

“அரசாங்கம்  (பட்ஜெட்டில்) இளைஞர்களின்  உயர்கல்விக்கு  முன்னுரிமை  கொடுத்திருக்க  வேண்டும்.

“ஆனால், நிதி  அமைச்சராகவுமுள்ள  பிரதமர்  பொதுப்  பல்கலைக்கழகங்களுக்கான  ஒதுக்கீட்டில்  ரிம1.4 பில்லியனைக்  குறைத்து அதே  நேரத்தில்  பிரதமர்  துறைக்கான  ஒதுக்கீட்டில்  ரிம1 பில்லியனைக்  கூட்டியிருக்கிறார்”, என்று  சிம்  கூறினார்.

இன்னும்கூட  காலம்  கடந்து  விடவில்லை. தவற்றைத்  திருத்த  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  இன்னும்  அவகாசம்  இருக்கிறது  என்றாரவர்.