தேவமணி பேராக் சட்டமன்றத் தலைவர் பதவியைத் துறக்க வேண்டும்- குலசேகரன்

deva2013 ஜூன் 28-இல்  அப்போது  மஇகா  உதவித்  தலைவராக  இருந்த  எஸ்.தேவமணி  பேராக்  மாநிலச்  சட்டமன்றத்  தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். இது, 2013 பொதுத்  தேர்தலில்  சுங்கை  சிப்புட்  நாடாளுமன்றத்  தொகுதியில் அவர் தோற்றுப்போன  பின்னர்   நடந்தது.

இவ்வாண்டு  நவம்பர்  6-இல் தேவமணி  மஇகா  துணைத்  தலைவர்  பதவிக்காக  எஸ். சரவணனை  எதிர்த்துப்  போட்டியிட்டார். போட்டியில்  சரவணன்  வெல்வார்  என்றே  பலரும்  நம்பினார். ஆனால், அவர்  தேவமணியிடம்  தோற்றார்.

கட்சித்  தேர்தலுக்கு  முன்னதாக, தேவமணி  துணைத்  தலைவர்  பதவி  பொறுப்புமிக்க  பதவி  என்றும்   ‘இந்தியர்களிடையேயும்  மலேசியர்களிடையேயும்  மஇகாமீது  மீண்டும்  நம்பிக்கை  வர பாடுபட  வேண்டிய கடப்பாடு’ துணைத்  தலைவருக்கு  உண்டு  என்றும்  குறிப்பிட்டு  தாம்  தேர்ந்தெடுக்கப்பட்டால்  சட்டமன்றத்  தலைவர்  பதவியைத்  துறக்கப்போவதாக  பகிரங்கமாக  அறிவித்தார்.

இப்போது  பதவியை  வென்ற  நிலையில், சட்டமன்றத்  தலைவர்  பதவி  பற்றி  கட்சித்  தலைவரும்  பிரதமரும்தான்  முடிவெடுக்க  வேண்டும்  என்கிறார்.

அவர் சட்டமன்றத்  தலைவர்  பதவியைத்  துறக்கப்போவதாகக்  கொடுத்த  வாக்குறுதியை  மீறி  விட்டார்போல்  தோன்றுகிறது. ஏன்  இந்தப்  பல்டி? மஇகா  பேராளர்களின்  வாக்குகளைப்  பெறுவதற்காக  அவர்  அவ்வாறு  வாக்குறுதி  கொடுத்திருக்கிறார். அதாவது  அவர்  பேராளர்களையும்  பொதுமக்களையும்  ஏமாற்றி  இருக்கிறார்.

2000ஆம்  ஆண்டு லூனாஸ்  இடைத்  தேர்தல்  நினைவிருக்கிறதா? அப்போதைய  மஇகா  தலைவர்  ச. சாமிவேலு  அந்த  இடைத் தேர்தலில்  மஇகா  தோற்றால்  கோலாலும்பூருக்குத்  திரும்பப்  போவதில்லை  என்று  பகிரங்கமாக  அறிவித்தார். அவர்  வாக்குறுதியைக்  காப்பாற்றவில்லை. மன்னிப்பு  கேட்காமல்  கோலாலும்பூருக்கு  வந்துபோய்க்  கொண்டுதான்  இருக்கிறார்.

தேவமணிக்கு  என்  அறிவுரை  இதுதான்: சாமிவேலுபோல்  நடந்து  கொள்ளாதீர். ஒரு  ஆண்மகனாக  கெளரவமாக  பதவியைத்  துறப்பீர்.

——————————————————————————————————————
எம். குலசேகரன்: ஈப்போ பாராட்  எம்பி,  டிஏபி  தேசிய  உதவித்  தலைவர்