பாஸின் குறும்பு நடவடிக்கைகளைத் தடுக்க டிஎபி சிலாங்கூர் அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்கும்

 

guanபாஸ் கட்சி அதன் குறும்புகளைத் தொடராமல் இருப்பதை உறுதி செய்வதற்காக டிஎபி சிலாங்கூர் அரசாங்கத்தில் தொடர்ந்து பங்கு பெறும் தேவை இருக்கிறது என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் நம்புகிறார்.

பாஸ் கட்சி “தவறான கொள்கைகளை” அமல்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு இது அவசியமாகிறது என்று கூறிய அவர் கிளந்தானின் இக்கட்டு நிலையைச் சுட்டிக் காட்டினார்.

“கிளந்தானைப் பாருங்கள். அவர்கள் சட்ட விரோதமான மரம் வெட்டுதலில் ஈடுபட்டுள்ளனர். பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹுசாம் (மூசா) இதனை அம்பலப்படுத்தியுள்ளார்.

“அவர்கள் (பாஸ்) இதை கிளந்தானில் செய்ய முடியும் என்றால், அதை அவர்கள் சிலாங்கூரிலும் கூட செய்ய முடியும்.

“அவர்கள் கிளந்தானில் செய்ததைப் போன்ற குறும்பு நடவடிக்கைகளை செய்யவிடாமல் நாம் தடுக்க வேண்டும்”, என்று குவான் எங் இன்று டிஎபி தேசிய வனிதா காங்கிரஸில் கூறினார்.