சிலாங்கூரில் அம்னோ-பாஸ் அரசாங்கம் அமைக்க சதித் திட்டமா?

 

 கடந்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத்தில் மந்திரி புசார் சம்பந்தப்பட்ட நெருக்கடியின் போது அம்னோவுடன் சேர்ந்து ஓர் ஒற்றுமை அரசாங்கம் அமைக்க தாம் விரும்பியதாகக் கூறப்படுவதை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மறுத்துள்ளார்.

“இல்லை, இல்லை, அப்படி எதுவும் இல்லை”, என்று செய்தியாளர்கள் இன்று அவரிடம் இது பற்றி வினவிய போது கூறினார்.

பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹுசாம் மூசா இக்குற்றச்சாட்டை சுமத்தியிருந்ததோடு தாம் கூறியதில் உண்மையில்லை என்றால் தமது மனைவியை விவாகரத்து செய்யத் தயார் என்று கூறியிருந்த போதிலும், ஹாடி மேற்கண்டவாறு கூறினார்.

இதற்குப் பதிலாக, பாஸ் கட்சியின் அந்த முன்னாள் உதவித் தலைவரை அவ்வாறு செய்யுமாறு ஹாடி சவால் விட்டார்.

“அவர் செய்யட்டும். அவர் சொல்வது உண்மையென்றால், நாங்கள் பொய் கூறுகிறோம் என்றால், அவர் தாராளமாக அவரது மனைவியை விவாகரத்து செய்யலாம்”, என்று ஷா அலாமில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஹாடி கூறினார்.