‘இவ்வளவுதான் ஹரிமாவ் மலாயாவின் தரம்’

levelஅனைத்துலக  அளவில்  படுதோல்வி  கண்டுள்ள  மலேசியக்  கால்பந்துக்  குழுவான  ஹரிமாவ்  மலாயா  மலேசியர்கள்  பெருமைப்படத்தக்க  வகையில்  எழுச்சி  பெறும்  என்ற  நம்பிக்கையை புத்ரா  ஜெயா  இழந்து  விட்டது.

“இதுதான் மூத்த  ஆட்டக்காரர்களைக்  கொண்ட  அக்குழுவின்  தரம்”, என  இளைஞர், விளையாட்டுத் துறை  அமைச்சர்  கைரி  ஜமாலுடின்  இன்று  நாடாளுமன்றத்தில்  கூறினார்.

எம்பிகள்  குறிப்பாக  முகம்மட் ஹனிபா  மைடின்(அமானா- சிப்பாங்),  தேசிய  கால்பந்துக்  குழுவின்  தரம்  உயர  அரசாங்கம் முயற்சிகள்  மேற்கொள்ள  வேண்டும்  என்று  கூறியதற்கு  கைரி  இவ்வாறு  பதிலளித்தார்.

“முன்னேறலாம். அதுவும் ஓரளவுக்குதான். முன்பு  பாலஸ்தீனத்திடம்  0-6  என்று  தோல்வி  கண்டவர்கள்  அடுத்து  0-3  என்று  தோல்வியுறலாம். அவர்களின்  திறமையை  நான்  மட்டம்  தட்டவில்லை.  ஆனால்,  இன்று  அவர்களின்  கால்பந்து  தரம்  இந்த  அளவில்தான்  உள்ளது”, என்று  கைரி  கூறினார்.

“டிஎன்ஏ, அளிக்கப்படும்  பயிற்சி, பயன்படுத்தப்படும் உத்திகள்  ஆகியவையே  காரணங்கள். 28-வயது  ஆன  ஆட்டக்காரர்களுக்குப்  புதிய  உத்திகளைக்  கற்றுத்தர  முடியாது”, என்றாரவர்.

நாடு  ஒரு  காலத்தில்  விளையாட்டுத்  துறையில்  கொண்டிருந்த  பேரையும்  புகழையும்  திரும்பப்  பெற  அடுத்த  தலைமுறையைத்தான்  நம்பியுள்ளது  என அவர்  தெரிவித்தார்.