அமைச்சர் ஆமை முட்டைகள் சாப்பிடுவதைக் காட்டும் தெளிவான படங்கள்

sabriஒரு  விருந்தில்   ஆமை  முட்டைகள்  சாப்பிட்டதாகக்  கூறப்படுவதை   புறநகர், வட்டார  மேம்பாட்டு  அமைச்சர்  இஸ்மாயில் சப்ரி  யாக்கூப்  மறுத்தாலும்  சாபா  ஆமைகள்  பாதுகாப்பு  மையத்தின்  முகநூல் பக்கத்தில்  பதிவிடப்பட்டிருக்கும்  படங்கள்  அவர்  முட்டைகள்  சாப்பிடுவதைத்  தெளிவாகக்  காண்பிக்கின்றன.

அப்படங்கள்  இஸ்மாயில்  சப்ரியின்  முன்னால்  உள்ள  ஒரு  சிறு  தட்டில்  ஆமை  முட்டைகள்  இருப்பதையும்  அவரது  தட்டில்  இரண்டாக  உடைக்கப்பட்ட  முட்டை  ஒன்று  இருப்பதையும்  காண்பிக்கின்றன.

இதன்  தொடர்பில்  இஸ்மாயில்  சப்ரியின்  எதிர்வினையைப்  பெறுவதற்கு   மலேசியாகினி  அவரைத்  தொடர்பு  கொண்டுள்ளது.

இம்மாதத்  தொடக்கத்தில்  அமைச்சர்  அவ்விருந்தில்  மீன்  மட்டுமே  சாப்பிட்டதாகக்  கூறினார்.

ஆனால், அவர்  முட்டை  சாப்பிடுவதைக்  காண்பிக்கும்  படங்கள்  இணையவெளியில்  வெளியானதை  அடுத்து  உயிரினப்  பாதுகாவலர்கள்  அவரைச்  சாடினர்.

ஆமை  முட்டைகள்  சேகரிப்பது  தீவகற்ப  மலேசியாவில்  சில  கட்டுப்பாடுகளூடன்  அனுமதிக்கப்படுகிறது.  ஆனால், சாபாவில்  ஆமை  முட்டைகள்  சேகரிப்பதும்  விற்பதும்,  சாப்பிடுவதும்  குற்றமாகும்.

அக்குற்றச்செயலுக்கு  ரிம50,000 அபராதம்  அல்லது  ஐந்தாண்டுச்  சிறை  அல்லது  இரண்டும்  சேர்த்து  விதிக்கப்படலாம்.