அருள்செல்வன் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

Pakatan-PSMமலேசிய சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) முன்னாள் தலைமைச் செயலாளரும் தற்போது கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான எஸ். அருள்செல்வன் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவிருப்பதாக பிஎஸ்எம்மின் தலைமைச் செயலாளர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேச நிந்தனைச் சட்டம் 1948, செக்சன் 4(1)(b)இன் கீழ் அருள்செல்வன் குற்றம் சாட்டப்படவிருப்பதாக பிஎஸ்எம்மின் வழக்குரைஞர்கள் தகவல் அளித்துள்ளதாக பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் கூறுகிறார்.

அருள்செல்வன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு அதிகப்பட்சமான ரிம5,000 அல்லது மூன்று ஆண்டுக்கு மேல்போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க அச்சட்டம் வகை செய்கிறது.

கடந்த 10, பெப்ரவரி 2015 இல் அருள்செல்வன் பெடரல் உச்சநீதிமன்றம் அன்வார் இப்ராகிமுக்கு அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்காகவே போலீசார் அவரை நீதிமன்றத்தின்முன் நிறுத்துகின்றனர் என்று தாங்கள் நம்புவதாக சிவராஜன் அவரது அறிக்கையில் கூறுகிறார்.

அருள்செல்வன் வெளியிட்ட அறிக்கை பிஎஸ்எம் சார்பில் வெளியிடப்பட்டதாகும் என்பதைச் சுட்டிக் காட்டிய சிவராஜன், கட்சியின் கருத்துப்படி அன்வார் குறித்த தீர்ப்பு அரசியல் செல்வாக்குக்கு உட்பட்டது என்றார்.

அருள்செல்வன் கடந்த 19, பெப்ரவரி 2015 இல் அவரது காஜாங் வீட்டில் கைது செய்யப்பட்டு டாங் வாங்கி போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டார். அவரது கைத்தொலைபேசி மற்றும் கணினி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றிக்கொண்டனர். அவரை தடுத்து வைப்பதற்கான ரிமாண்ட் உத்தரவு கிடைக்காததால் பெப்ரவரி 20, 2015 மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

நீதி, நிருவாகம் மற்றும் ஊழல்கள் ஆகியவை குறித்து கேள்வி எழுப்பும் சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்களுக்கு எதிராக ஆட்சியில் இருப்பவர்கள் மனம் போன போக்கில் கொடுமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதை இது காட்டுகிறது என்று கூறிய சிவராஜன், இந்தக் காலனித்துவ கொடுங்கோல் சட்டத்தால் அஸ்மி ஷரூம், சிவராசா, தியன் சுவா, காலிட் இஸ்மாத், ஸுனார் போன்றவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

எதிர்ப்புக் குரலை நசுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் இந்த பொறுக்கியெடுத்து குற்றம் சாட்டும் முறையை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பிஎஸ்எம் போலீசாரையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்வதாக கூறிய சிவராஜன், அருள் செல்வன் மற்றும் இதர சமூக மற்றும் அரசியல் ஆர்வலர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.