சைபுடின்: அம்னோ- எதிர்ப்பு அலை போதும் அடுத்த பொதுத் தேர்தலை ஹராபான் வெல்ல முடியும்

saifஅம்னோ- எதிர்ப்பு  உணர்வு  ஒன்றே   போதும்.  பக்கத்தான்  ஹராபான்  பாஸின்  உதவியுடனோ உதவி  இல்லாமலோ  அடுத்த  பொதுத்  தேர்தலில்   வெற்றிபெற  முடியும்  என்கிறார்  முன்னாள்  உயர்கல்வித்  துணை  அமைச்சர்  சைபுடின்  அலி.

இப்போது  சைபுடின்  பிகேஆர்  உறுப்பினர்.  ‘Anything But Umno'(ஏபியு- அம்னோவைத்  தவிர  வேறு  எதுவும்) உணர்வு  இன்னமும்  உள்ளது  என்றும்  அது  அடுத்த  தேர்தலில்   அம்னோவுக்கு எதிராக  வேலை  செய்யும்  என்றும் அவர்  நம்புகிறார்.

“கடந்த  பொதுத்  தேர்தலில்  வாக்காளர்களில் பாதிப்  பேர்  எதிரணிக்கு  வாக்களித்தார்கள். எல்லாருமே  எதிரணி  வேண்டும்  என்று  வாக்களித்தார்கள்  என்று  சொல்ல  முடியாது. பிஎன்னுக்கு  எதிர்ப்பைத்  தெரிவிக்கவே  அவ்வாறு  வாக்களித்தார்கள்.

“ஏபியு  நினைவிருக்கிறதா? நானும்தான்  அதனால் பாதிக்கப்பட்டேன்”, என்றாரவர். சைபுடின்  2013  பொதுத்  தேர்தலில்  தெமர்லோ  நாடாளுமன்றத்  தொகுதியில்  போட்டியிட்டுத்  தோற்றதைத்தான்  அவ்வாறு  குற்ப்பிட்டார்.

ஏபியு  இயக்கம்  2011-இல்  தலையெடுத்தது. அம்னோ- பிஎன்  தவிர்த்து  வேறு  எந்தக்  கட்சி  வேண்டுமானாலும்  ஆட்சிக்கு  வரட்டும்  என்ற  செய்தியை  அவ்வியக்கம்  பரப்பி  வந்தது.

இப்போது  அவ்வியக்கம்  வலுவிழந்திருந்தாலும்  ரிம2.6 பில்லியன்  ஊழலின்  காரணமாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராக  அதிருப்தி  பெருகி  வருவதாக  சைபுடின்  கூறினார். அந்த  அதிருப்தியே  சைபுடின்  அம்னோவை  விட்டு  வெளியேறவும்  காரணமாக  இருந்தது.