மேலும் அதிக இந்திய பட்டங்களை மலேசியா அங்கீகரிக்கும்

degreeமேலும்  அதிகமான இந்திய உயர்கல்விப்  பட்டங்களை,  குறிப்பாக  தகவல்  தொழில்நுட்பம்(ஐடி),  பொறியியல்  பட்டங்களை  அங்கீகரிக்க  மலேசிய  அரசாங்கம் உரிய  நடவடிக்கைகளை  எடுக்கும்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார்.

புத்ரா  ஜெயாவில்  இந்திய  பிரதமர்  நரேந்திர  மோடியுடன்  இருதரப்புப்  பேச்சுகள்  நடத்திய  பின்னர்  அவருடன்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  கலந்துகொண்ட  நஜிப்,  மேலும்  அதிகமான  இந்திய  பட்டங்களுக்கு,  குறிப்பாக  ஐடி, பொறியியல்துறை  பட்டங்களுக்கு  அங்கீகாரம்  கொடுக்க  வேண்டுமாய்  மோடி  கேட்டுக்கொண்டதாக  தெரிவித்தார்.

மலேசியர்களில்  பலர்  இந்தியாவில்  கல்வி,  குறிப்பாக  மருத்துவக் கல்வி  கற்றிருப்பதை  நஜிப்  சுட்டிக்காட்டினார்.

“உரிய  நடவடிக்கை  எடுத்து  இந்தியாவில்   சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன்  பேச்சு  நடத்துவோம்.

“இது இந்திய  பல்கலைக்கழகங்களும்  தொழில்நுட்பக்  கல்லூரிகளும்  வழங்கும்  இன்னும்  அதிகமான  பட்டப்படிப்பை  அங்கீகரிக்க  வழிகோலும்.  மலேசியர்கள்  இந்தியா  சென்று  பட்டப்  படிப்பு  படிக்க  வாய்ப்பாகவும்  அமையும்”, என்றாரவர்.

27வது  ஆசியான்  உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள  மோடி மலேசியா வந்திருக்கிறார்