அம்னோவுக்கு மலாய்க்காரர் ஆதரவு 30விழுக்காடாகக் குறைந்து விட்டது என்றும் 78 விழுக்காட்டினர் இப்போதைய பொருளாதா நிலையில் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் எச்சரித்துள்ளார்.
மெர்டேகா மையம் மேற்கொண்ட ஆய்வை மேற்கோள் காட்டிய முகைதின் அம்னோவுக்கு மலாய்க்காரர் ஆதரவு எப்போதுமே 50 விழுக்காட்டுக்குமேல்தான் இருந்து வந்துள்ளது என்றார்.
“ஆனால், அண்மையில் அது 30 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. மலாய்க்காரர் ஆதரவைப் பெறுவதில் அம்னோ எப்போதுமே முன்னணியில் இருந்துள்ளது ஆனால், இப்போது அது குறைந்து விட்டது.
“அதேபோல் 17 விழுக்காட்டினர்தான் தற்போதைய பொருளாதார நிலைமையில் திருப்தி கொண்டிருக்கிறார்கள். 78 விழுக்காட்டினருக்குத் திருப்தி இல்லை.
“சீனர்களின் ஆதரவும் குறைந்து விட்டது. அது கடந்த பொதுத் தேர்தலில் 13 விழுக்காடாக இருந்தது. இப்போது 5 விழுக்காடுதான். அடுத்த ஈராண்டுகளில் மேலும் குறையலாம்.
“இதுதான் அம்னோவையும் பிஎன்னையும் எதிர்நோக்கும் உண்மை நிலவரம். நடப்புத் தலைமைத்துவமும் 1எம்டிபியும்தான் இதற்குக் காரணம். இந்நிலையைச் சரிசெய்யாவிட்டால் ஈராண்டுகளில் (அடுத்த பொதுத் தேர்தலில்) அம்னோ தோற்கக் கூடும்”, என்றாரவர்.
முகைதின் நேற்று பாகோ அம்னோ தொகுதிக் கூட்டத்தில் பேசினார்.
தமதுரையில் மெர்டேகா மைய ஆய்வு பற்றிக் குறிப்பிட்ட அம்னோ துணைத் தலைவர் அந்த ஆய்வு எப்போது செய்யப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை.
பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன அண்ணே! அதற்குள் அம்னோ செய்யும் தில்லு முல்லுகளுக்கு இந்நாட்டு மடமக்கள் ஈடு கொடுக்க முடியாது. எனக்கு தெரிந்தவரை உலகிலேயே அரசியலில் தெளிந்த முட்டாள்கள், மலேசிய மக்கள். அடுத்த பொதுத்தேர்தலில் மீண்டும் அம்நோவையே ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவார்கள்.பொறுத்திருந்து பாருங்கள்.