மசீச: கல்வி அமைச்சு பாடப்புத்தங்களை “குட்டி நெப்போலியன்கள்” மீது எறிய வேண்டும்

 

 அமைச்சரவையின் முடிவுக்கு எதிராகச் செயல்பட்ட “குட்டி நெப்போலியன்களை” கல்வி அமைச்சு அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மசீச கேட்டுக் கொண்டுள்ளது.

பல சீனமொழிப்பள்ளிகளுக்கு தேசியமொழிப்பள்ளிகளுக்கான பகசா மலேசியா பாடநூல்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று அறியப்படுகிறது.

இச்செயல் கல்வி அமைச்சு இரகசியமாக தேசிய மற்றும் தாய்மொழிப்பள்ளிகளில் சமநிலையான பகசா மலேசியா பாடத்திட்டத்தை அமலாக்கம் செய்கிறது என்ற வதந்திக்கு இட்டுச் சென்றுள்ளது என்று மசீச மத்தியக்குழு உறுப்பினர் கோ சின் ஹான் கூறினார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்த துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன் இரண்டு வகைப்பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பிற்கான பகசா மலேசியா பாடத்திற்கு வெவ்வேறான பாடத்திட்டங்களும் வெவ்வேறான சோதனை முறைகளும் இருந்தன என்று கூறினார்.

ஆனால், 2016 ஆம் ஆண்டிலிருந்து இருவகையானப் பள்ளிகளும் ஒரே மாதிரியான பகசா மலேசியா பாடநூலைப் பயன்படுத்தும் என்றார்.

ஆனால், அவரது சக துணைக் கல்வி அமைச்சர் சோங் சின் வூன், அமைச்சரவை பெருங்கல்வித் திட்டத்தைத் திருத்திய போது எடுத்த முடிவின்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பகசா மலேசியா பாடநூல்களும் தேர்வு முறைகளும் இருக்கக்கூடாது என்று கூறியிருந்ததை கோ சுட்டிக் காட்டினார்.

இவ்விரு அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரணானதாக இருப்பதால், எது ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை கல்வி அமைச்சு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று கோ கூறினார்.

“இரு துணை அமைச்சர்களின் அறிக்கைகளும் தெளிவாகா காட்டுவது இப்பிரச்சனையில் “கவனக்குறை” என்று கூறப்படுவது நுட்பக்கூறல்ல, மாறாக உள்நோக்கம் கொண்டது”, என்று அவர் கருத்துரைத்தார்.

சீனச் சமுகத்திற்கு உண்மை தெரிய வேண்டும் என்பதோடு இப்பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் என்று கோ மேலும் கூறினார்.

“அனைத்துப்பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான பகசா மலேசியா பாடத்திட்டத்திற்கு எதிரான மசீசவின் நிலைப்பாடு உறுதியானது என்பதோடு ஐயப்பாட்டிற்கு இடமில்லாததாகும்.

“அமைச்சரவையின் முடிவை அலட்சியப்படுத்தவோ கீழறுக்கவோ முயற்சிக்கும் எந்த ஒரு தரப்புக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கோ மேலும் கூறினார்.