எம்ஏசிசி இன்று நஜிப்பிடம் வாக்குமூலம் பதிவு செய்யக்கூடும்

stateமலேசிய  ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  அவரது வங்கிக்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்ட பெருந் தொகை  தொடர்பில்  வாக்குமூலம்  பதிவு  செய்யும்  என  எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு  வட்டாரத்தை  மேற்கோள்  காட்டி  ராய்ட்டர்ஸ் செய்தி  நிறுவனம்,  எம்ஏசிசி  பிரதமரிடம்  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல் நிறுவனத்திடமிருந்து  வந்த  நிதி பற்றி  விசாரிக்கும்  எனத்  தெரிவித்தது.

நஜிப்  இன்று  எம்ஏசிசி  விசாரணைக்குச்  செல்வதைப் பிரதமர் அலுவலகப்  பேச்சாளர்  ஒருவர்  உறுதிப்படுத்தவில்லை  ஆனால்,  அதன்  தொடர்பில்  ஓர்  அறிக்கை  வெளியிடப்படும்  என்று  மட்டும்  கூறினார்.

எம்ஏசிசி,  நஜிப்பின்  வங்கிக்  கணக்கில்  கண்டுபிடிக்கப்பட்ட  ரிம2.6 பில்லியன்  பற்றியும்  ரிம42 மில்லியன்  பற்றியும்  புலனாய்வு  செய்து  வருகிறது.

ரிம2.6 பில்லியன்  கடந்த  பொதுத்  தேர்தலுக்குமுன்  மத்திய  கிழக்கிலிருந்து  வந்த  அரசியல்  நன்கொடை  என்று  நஜிப்  கூறியுள்ளார்.

ரிம42 மில்லியன்  எஸ்ஆர்சி-இலிருந்து  2014-இலும்  இவ்வாண்டு  தொடக்கத்திலும்  அவரது  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டது.

எஸ்ஆர்சி  நிதி  அமைச்சுக்குச்  சொந்தமான ஒரு  நிறுவனம்.  நஜிப்  நிதி  அமைச்சராகவும் உள்ளார்.