அதிகமான பணம் செலவிடுவதால் மட்டும் மலேசியா சிறந்த கல்வியை வாங்கிவிட முடியாது

 

 அதிகமான பணம் செல்விடுவதால் மலேசியாவின் அடிப்படைக் கல்வி முன்னேற்றம் கண்டுவிடும் சாத்தியக்கூறு இல்லை என்று உலக வங்கியின் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் தலைமை பொருளியலாளர் சுதிர் ஷெட்டி கூறினார்.

“இது பணம் செலவிடுவது பற்றியதல்ல. உண்மையில், மலேசியா அடிப்படைக் கல்விக்கு ஏராளமான பணம் செலவிடுகிறது”, என்று இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியாவுக்கான சவால்களும் வாய்ப்புகளும் பற்றி உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

மாறாக, பள்ளிகளின் தன்னாட்சி, பள்ளிகள் பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் காட்ட வேண்டிய பொறுப்புடமையை அதிகரித்தல் ஆகியவற்றோடு ஆசிரியர்களின் தரத்தை மேம்பாடு செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஷெட்டி கூறினார்.

இவற்றில் கவனம் செலுத்துவது ஏன் என்றால். அனைத்துலக சோதனைகளில் மலேசிய மாணவர்கள் தவறாமல் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் மாணவர்களுடன் மட்டுமில்லாமல் தாய்லாந்து மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளின் மாணவர்களின் தரத்தை விட தாழ்ந்த நிலையில் இருந்து வருகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

மலேசியாவின் அடிப்படைக் கல்வி தொடர்ந்து இவ்வளவு கீழ்மட்டத்தில் இருக்குமானால், புதுமை அல்லது அறிவுசார்ந்த பொருளாதாரத்தை அடைவது சிரமமாகும் என்று ஷெட்டி தெளிவுபடுத்தினார்.

இது கல்வி கற்பதற்கான வாய்ப்பு பற்றியதோ, குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்களா இல்லையா என்பது பற்றியதோ ஆல்ல என்று கூறிய அவர், இது குழந்தைகள் பள்ளியில் ஏதாவது கற்கிறார்களா, பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வேளையில் அறிவு சார்ந்த பொருளாதாரத்தில் வெற்றி பெறுவதற்கு தேவையான அடிப்படை கணிதம், வாசித்தல் மற்றும் அறிவியல் திறன் ஆகியவற்றை பெற்றிருக்கிறார்களாக என்பது பற்றியதாகும் என்றாரவர்.

அடிப்படைக் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் மலேசியாவின் மனிதவள மூலதனத்தை விரைவுபடுத்த உதவும் என்றும் ஷெட்டி மேலும் கூறினார்.