பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையில் பிடிபட்டவர்களில் ஒருவர் ரேலா உறுப்பினர்

arresபயங்கரவாதக்  கும்பல்களுடன்  தொடர்பு  வைத்துள்ளவர்கள்  என்ற  சந்தேகத்தின்பேரில்  கைதானவர்களில்  ஒருவர்  மக்கள்  தன்னார்வப்  படை(ரேலா) உறுப்பினர்.

நவம்பர் 17-க்கும்  டிசம்பர் 1-க்குமிடையில்  ஐவர்  சந்தேகத்தின் அடிப்படையில்  கைது  செய்யப்பட்டதாக  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  தெரிவித்தார்.

25-க்கும்  59  வயதுக்குமிடைப்பட்ட அந்த  ஐவரில்  ஒருவர்  மலேசியர்  மற்ற  நால்வரும் வெளிநாட்டவர்.

“மூன்று சந்தேகப்  பேர்வழிகள்  கிளந்தான்,  சிலாங்கூர், ஜோகூர் ஆகிய  மாநிலங்களில்  கைது  செய்யப்பட்டனர். இவர்கள்  ஐஎஸ்  பயங்கரவாதக்  கும்பலுடன்  தொடர்பு  வைத்துள்ளவர்கள்  என  நம்பப்படுகிறது”, என  காலிட்  இன்று  ஓர்  அறிக்கையில் கூறினார்.

கைதானவர்களில்  மூத்தவரும்   ஒரே மலேசியருமான  ஒரு  தையல்காரர் கிளந்தான்  கோத்தா  பாருவில்  கைது  செய்யப்பட்டார். அவர்  ரேலா  உறுப்பினருமாவார்.

சந்தேகத்துக்குரிய  மற்ற  இருவரும்  கோலாலும்பூரில்  குடிநுழைவுச்  சட்டத்தின்கீழ்  கைது  செய்யப்பட்டனர். அவர்கள்  அவர்களின்  நாடுகளுக்கே  திருப்பி  அனுப்பப்படுவர்.

ஒருவர்  44-வயது  ஐரோப்பியர்.  பினாங்கில்  தற்காலிக  ஆங்கில  ஆசிரியராக  பணியாற்றி  வந்தவர்.  அல்கைடா  பயங்கரவாதக் கும்பலுடன்  தொடர்புள்ள  அவர்  ஆப்கானிஸ்தானிலும்  போஸ்னியாவிலும்  பயங்கரவாத  நடவடிக்கைகளில்  ஈடுபட்டவர் என்று  நம்பப்படுகிறது.

மற்றவர்  ஆப்ரிக்க  நாட்டைச்  சேர்ந்தவர். பெட்டாலிங்  ஜெயாவில்  தனியார்  கல்லூரி  ஒன்றின்  மாணவர்.  அவரும்  பயங்கரவாத  நடவடிக்கைகளில்  ஈடுபட்டிருப்பதாக  நம்பப்படுகிறது.

பயங்கரவாதத்துடன்  தொடர்புள்ளவர்கள்  என்ற  சந்தேகத்தில்  உள்நாட்டவரும் வெளிநாட்டவரும்  கைது  செய்யப்படுவது  இது  முதல்முறை  அல்ல. அக்டோபர்  30-இல் சிலாங்கூர்,  பேராக், ஜோகூர்  ஆகியவற்றில்  ஒரே  நேரத்தில்  மேற்கொள்ளப்பட்ட  அதிரடி  நடவடிக்கையில்  எண்மர்  கைதானார்கள்.

ஆகஸ்ட்  மாதத்தில்  நாடு  முழுக்க  மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கையில்  ஐஎஸ்  உறுப்பினர்கள்  என்று  சந்தேகத்தின்பேரில்  10 பேர்  கைது  செய்யப்பட்டனர்.