என்எஸ்சி பற்றி விவாதம் நடத்த ஹமிடிக்கு கிட் சியாங் சவால்

kitதேசிய பாதுகாப்பு மன்றம் (என்எஸ்சி) மசோதா குறித்து தம்மோடு பகிரங்க விவாதம் நடத்த வருமாறு டிஎபி நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடிக்கு சவால் விடுத்துள்ளார்.

அந்த மசோதா பொதுமக்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு வகைசெய்யவில்லை. மாறாக அது சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலுகிறது என்று கிட் சியாங் கூறினார்.

இந்த பொது விவாதத்தை கூச்சிங், கோத்தாகினாபாலு, கோலாலம்பூர், பினாங்கு அல்லது ஜொகூர் பாரு ஆகிய இடங்களில் நடத்தலாம். அதை எந்த ஓர் இடத்திலும் அல்லது அனைத்து இடங்களிலும் நடத்தலாம். அதற்கான முடிவை ஹமிடியிடமே விட்டுவிடுவதாக கிட் சியாங் கூறினார்.

கடந்த வியாழக்கிழை இரவு நாடாளுமன்ற மக்களவை அந்த மசோதாவை 107 க்கு 74 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றியது. அது அவசரப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்பதை மறுத்த உள்துறை அமைச்சர் ஹமிடி, அந்த மசோதாவுக்கு எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை என்பதோடு அதில் பிரதமருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படவில்லை என்று விளக்கமளித்திருந்தார்.