டிஎபி சவால்: மசீச செனட்டர்கள் என்எஸ்சி மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்

 

 மசீசவின் செனட்டர்கள், குறிப்பாக இளைஞர் பிரிவு தலைவர் சோங் சின் வூன், தேசிய பாதுகாப்பு மன்றம் மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்ற மேலவையில் வாக்களிக்க வேண்டும் என்று டிஎபி அவர்களை வலியுறுத்தியுள்ளது.

கடந்த வாரம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச் செல்லக்கூடும் என்று மசீசவின் இளைஞர் பிரிவின் சட்டக்குழுத் தலைவர் இங் கியான் நாம் கருத்துரைத்திருந்ததைத் தொடர்ந்து செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோ இவ்வாறு கூறினார்.

அந்த அறிக்கையிலிருந்து சோங் பின்வாங்காமல் இருந்து வருவதால், அவரின் நிலைப்பாடு மசீச இளைஞர் பிரிவின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு என்றும் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறிய தெரெசா, மலேசியர்கள் இப்போது கேட்பது சோங் தைரியமாக அந்த மசோதாவுக்கு எதிராக செனட்டில் வாக்களிப்பாரா என்பதாகும் என்று தெரெசா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டுள்ளார்.

சோங் அவரது நிலைப்பாட்டை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று தெரெசா கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற மக்களவை கடந்த வியாழக்கிழமை இந்த மசோதாவை நிறைவேற்றியது.